
கோலாலாம்பூர், அக்டோபர்-24,இந்தத் தீபாவளித் திருநாளை முன்னிட்டு, பெவிலியன் REIT தாய் நிறுவனத்தின் கீழ் இயங்கும் பெவிலியன் கோலாலாம்பூர், பெவிலியன் புக்கிட் ஜாலில் மற்றும் Intermark Mall ஆகிய வணிக வளாகங்களில் பாரம்பரியக் கலைகள் மற்றும் கலாச்சார நிகழ்வுகளுடன் அக்டோபர் 22 முதல் நவம்பர் 9 வரை பிரம்மாண்ட தீபாவளிக் கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன.
இவற்றை, மலேசியாவுக்கான இந்திய உயர் ஆணையர் சோமநாத் கோஷ், பெவிலியன் REIT இயக்குநர் வாரியத்தின் Baljeet Kaur, Maybank தலைமை டிஜிட்டல் அதிகாரி டத்தின் கல்யாணி நாயர் மற்றும் MODA தலைவர் Cyrus Chin ஆகியோர், பெவிலியன் கோலாலாம்பூரில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தனர்.
தொடக்க விழாவில், கோலாலம்பூரில் உள்ள இந்திய உயர் ஆணையத்தின் வழிகாட்டலில் வழங்கப்பட்ட Akhand Bharat சிறப்புத் திறப்பு விழா நடனம் விருந்தினர்களை வெகுவாகக் கவர்ந்தது.
பெவிலியன் கேஎல் வளாகத்தில் அரண்மனை பாணியிலான முகப்புகள், ரங்கோலி அலங்காரங்கள் மற்றும் MODA ஆடை வடிவமைப்பாளர்களின் நவீன புடவை அணிவகுப்பு ஆகியவை இடம்பெற்றுள்ளன.
மேலும், நவம்பர் மாதத்தில் கதக், ஒடிசி, கதகளி உள்ளிட்ட இந்தியப் பாரம்பரிய நடன நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன.
இவ்வேளையில், பெவிலியன் புக்கிட் ஜாலிலில் மாணவர்களால் உருவாக்கப்பட்ட 1,080 ஆசீர்வாதங்களைக் குறிக்கும் புடவை அலங்காரம், ஒளிரும் யானை வடிவங்கள் மற்றும் வண்ணமயமான கோலங்கள் பார்வையாளர்களைக் கவருகின்றன.
Intermark Mall பேரங்காடியிலோ, சிறப்பு தீபாவளிச் சந்தை மற்றும் பிரத்யேகக் கோலக் கலைக் கண்காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.
மலேசியர்களின் கலாச்சார பன்முகத்தன்மையைப் பறைசாற்றும் வகையில் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பெவிலியன் கேஎல் அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரி டத்தோ Joyce Yap தெரிவித்தார்.
பொது மக்கள் அனைவரும் இந்த பாரம்பரியக் கலைக் கொண்டாட்டங்களைக் கண்டு மகிழ்வதோடு, சிறப்புப் பரிசுகளையும் ஷாப்பிங் பற்றுச் சீட்டுகளையும் வெல்லும் வாய்ப்புகள் வழங்கப்படுவதாக அவர் சொன்னார்.



