
கோலாலம்பூர், ஆகஸ்ட்-19-நாட்டில் வரும் அக்டோபர் முதல் டிசம்பர் மாதங்களுக்கு இடையே ‘Super El Nino எனும் அதீத வெப்பக் காலநிலை ஏற்படுவதற்கான வாய்ப்பு 90 விழுக்காட்டுக்கும் அதிகமாக உள்ளதாக மலேசிய வானிலை ஆய்வு மையமான MetMalaysia எச்சரித்துள்ளது.
இது வழக்கத்தை விட அதிக வெப்பத்தையும், தீவிர வறட்சியையும் ஏற்படுத்தும் என கணிக்கப்பட்டுள்ளது.
கடல் மேற்பரப்பு வெப்பநிலை 1.8 பாகை செல்சியஸ் வரை அதிகரித்துள்ளதால், எல் நினோ தீவிரமடைந்து இவ்வாண்டு இறுதியில் உச்சத்தை எட்டும் என MetMalaysia தலைமை இயக்குநர் ஜெனரல் Dr முகமட் ஹிஷாம் அனிப் தெரிவித்தார்.
இந்த நிகழ்வு, 1997 மற்றும் 2015-ஆம் ஆண்டுகளில் பதிவான தீவிர வெப்ப அலைகளுக்கு இணையான அல்லது அதைவிட அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
குறிப்பாக அடுத்தாண்டு பிப்ரவரி முதல் மே மாதம் வரை வெப்பத்தின் தாக்கம் மிகக் கடுமையாக இருக்கும் என்றும், மழைப்பொழிவு வெகுவாகக் குறையும் என்றும் அவர் எச்சரித்தார்.
எனவே பொது மக்கள் கடுமையான வெயில் மற்றும் வறட்சியை எதிர்கொள்ளத் தயாராக இருக்குமாறும், அதிகாரப்பூர்வ வானிலை அறிவிப்புகளைத் தொடர்ந்து கண்காணிக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.



