
பெய்ஜிங், அக்டோபர்-28,சீனாவின் முன்னாள் பெருந்தலைவர் மா சே துங் (Mao Zedong) குறித்த சர்ச்சைக்குரிய கருத்துக்காக, பிரபல பிரான்ஸ் கால்பந்து வீரரும் ரியல் மெட்ரிட் நட்சத்திரமுமான கிலியன் எம்பாப்பே பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார்.
தமது கருத்து தவறானது என்றும், சீனாவிலும் உலகெங்கிலும் உள்ள சீன மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தியதை உணர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் பரவிய வீடியோ ஒன்றில், தமது முகத்தை மா சே துங்கின் உருவத்துடன் இணைத்து வெளியிடப்பட்ட நகைச்சுவைப் படத்தைப் பற்றிப் பேசிய எம்பாப்பே, அவரைச் ‘சீன சர்வாதிகாரி’ எனக் குறிப்பிட்டதாகக் கூறப்படுகிறது.
மா சே துங் – சீன மக்கள் குடியரசு எனப்படும் நவீன சீனாவை உருவாக்கிய மாபெரும் கம்யூனிஸப் புரட்சியாளரும், 20-ஆம் நூற்றாண்டின் மிகச் செல்வாக்கு மிக்க அரசியல் தலைவர்களில் ஒருவரும் ஆவார்.
இந்நிலையில் எம்பாப்பேவின் பேச்சால் எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து, சீன அரசுத் தொலைக்காட்சி நிறுவனம் ஸ்பெயினின் La Liga கால்பந்துப் போட்டிகளின் ஒளிபரப்பை நிறுத்தியதுடன், எம்பாப்பே இடம்பெற்ற விளம்பரங்களையும் நீக்கியது.
மேலும், சீனாவின் முன்னணி நிறுவனங்களான Dongpeng, Mengniu மற்றும் Milkground ஆகியவை எம்பாப்பேவுடனான வர்த்தக ஒப்பந்தங்களை உடனடியாக இரத்துச் செய்தன.
தவிர, சீன கால்பந்து சங்கம் ரியல் மெட்ரிட் அணியிடம் கடும் எதிர்ப்பைப் பதிவுச் செய்ததுடன், எம்பாப்பேவும் அந்தக் கால்பந்து அணியும் அதிகாரப்பூர்வமாக மன்னிப்பு கோர வேண்டுமென வலியுறுத்தியது.
இந்தச் சர்ச்சை தொடர்பாக வருத்தம் தெரிவித்துள்ள La Liga நிர்வாகம், சீனப் பங்காளிகளுடன் இணைந்து பிரச்சனைக்குத் தீர்வு காண நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறியுள்ளது.



