Latestமலேசியா

மாணவிக்குப் பாலியல் தொல்லை: வைரல் காணொளி குறித்து தலைமையாசிரியர் புகார்

ஈப்போ, அக்-27-பேராக், Bagan Datukக்கில் மூன்றாம் படிவ மாணவிக்குப் பாலியல் தொல்லை அளித்தது தொடர்பில் விசாரிக்கப்பட்டு வரும் 56 வயது தலைமையாசிரியர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சம்பந்தப்பட்ட மாணவியின் குடும்பத்தினரால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் காணொளி இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து அவர் அவ்வாறு செய்துள்ளார்.

அம்மாணவியின் குடும்பத்தினர் அக்டோபர் 24ஆம் தேதி புகார் அளித்த நிலையில், தலைமையாசிரியர் மறுநாளான அக்டோபர் 25ஆம் தேதி காவல்துறையிடம் புகார் அளித்ததாக பேராக் மாநிலக் காவல்துறைத் தலைவர் Datuk Mohd Alwi Zainal Abidin தெரிவித்தார். வைரலான காணொளியில் தாம் தாக்கப்படும் காட்சிகள் இருப்பது குறித்து அத்தலைமையாசிரியர் அதிருப்தி தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.

அச்சம்பவம் தொடர்பாகக் குற்றவியல் சட்டத்தின் பிரிவு 323இன் கீழும், காணொளி இணையத்தில் பரவியது தொடர்பாக 1998ஆம் ஆண்டு தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டத்தின் பிரிவு 233இன் கீழும் விசாரணை நடத்தப்படுகிறது. இதுவரை தலைமையாசிரியர் உட்பட ஒன்பது பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக Alwi தெரிவித்தார்.

இதனிடையே, மாணவியின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில், சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சட்டம் 2017இன் பிரிவு 15(a)இன் கீழ் தலைமையாசிரியர் மீதான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாணவிக்குத் தகாத செய்திகளை அனுப்பியதாகவும், அவரிடம் காதல் மற்றும் பாச உணர்வுகளை வெளிப்படுத்தியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

அவ்விவகாரம் குறித்து முழுமையான விசாரணை நடத்துமாறு பேராக் மாநிலக் கல்வித் துறைக்கு கல்வி அமைச்சர் Datuk Seri Fadhlina Sidek இதற்கு முன் உத்தரவிட்டிருந்தார். விசாரணை முடியும் வரை, சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர் தற்காலிகமாக Bagan Datuk மாவட்டக் கல்வி அலுவலகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!