Latestமலேசியா

‘மாமாக்’ டேட்டிங் குறித்து இளம்பெண்ணின் சர்ச்சை கருத்து; இணையத்தில் சூடுபிடித்த விவாதம்

கோலாலம்பூர், ஜூலை 31 – டேட்டிங்கிற்கு ‘மாமாக்’ உணவகத்திற்குச் செல்வது குறித்து சமூக வலைதளத்தில் இளம்பெண் ஒருவர் பதிவிட்ட கருத்து, இணையத்தில் பரவலான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

அந்தப் பதிவில், “டேட்டுங்கிற்காக ‘மாமாக்’ உணவகத்திற்குச் செல்ல வேண்டும் என்று நினைத்தாலே வாந்தி வருவது போல் உணர்கிறேன்” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், அப்படிப்பட்ட டேட்டைத் திட்டமிடும் ஆண்கள் போதிய முயற்சி எடுக்காதவர்களாகவும், செலவு செய்ய விரும்பாதவர்களாகவும் தாம் கருதுவதாக தனது தனிப்பட்ட கருத்தைப் பகிர்ந்திருந்தார்.

அதுமட்டுமின்றி, குறைந்த செலவில் நடைபெறும் டேட்டிங்கை ஏற்றுக்கொள்ளும் பெண்களே “நல்ல பெண்கள்” என்ற எண்ணமும் தவறானது என்றும் அவர் கூறியிருந்தார்.

ஒரு பெண்ணின் குணத்தையோ மதிப்பையோ, அவர் எந்த வகையான டேட்டை ஏற்றுக்கொள்கிறார் என்பதன் அடிப்படையில் அளவிடக் கூடாது என்றும் அவர் தனது பதிவில் வலியுறுத்தியிருந்தார்.

இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியதைத் தொடர்ந்து, பலரும் அவரது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

டேட்டிங்கின் தரத்தை செலவோ அல்லது செல்லும் இடமோ நிர்ணயிக்காது என்றும், ‘மாமாக்’ உணவகத்தில் தொடங்கிய பல காதல் கதைகள் இன்று வெற்றிகரமான திருமண வாழ்க்கையாக மலர்ந்துள்ளன என்றும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, சிலர் அவரது கருத்தை ஆதரித்து, டேட்டிங்கிற்கான இடத் தேர்விலும் சற்று திட்டமிடலும் அக்கறையும் இருக்க வேண்டும் என்றும், ஒவ்வொருவருக்கும் தங்களுக்கென விருப்பங்களும் எதிர்பார்ப்புகளும் இருப்பது இயல்பானதே என்றும் கருத்து பதிவிட்டனர்.

சர்ச்சை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, தாம் ‘மாமாக்’ உணவகங்களையோ அங்குள்ள உணவையோ குறைத்து மதிப்பிடவில்லை என்றும், தமது பதிவு டேட்டிங் குறித்த தனிப்பட்ட விருப்பத்தை மட்டுமே பிரதிபலிப்பதாகவும் அந்த இளம்பெண் பின்னர் விளக்கம் அளித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!