
சென்னை, மே-5-முதல் தேர்தலிலேயே TVK தலைவர் விஜய் வரலாறு படைத்துள்ளார்.
வெறும் இரண்டு வயதே ஆன TVK, அரை நூற்றாண்டாய் அசைக்க முடியாமலிருந்த இருபெரும் கட்சிகளான திமுக – அதிமுகவை வீழ்த்தி, இன்று 108 இடங்களுடன் தமிழக சட்டமன்றத்தில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
எம்.ஜி.ஆருக்குப் பிறகு, நடிகர்-அரசியல்வாதி என்ற வகையில் இத்தகைய சாதனை யாராலும் எட்டப்படவில்லை.
ஆனால், 118 இடங்கள் தேவைப்படும் பெரும்பான்மை இல்லாததால், விஜய் முதல்வராக வர யாரின் ஆதரவு கிடைக்கும் என்பது இப்போது அனைவரின் கவனமாக உள்ளது.
திமுக கூட்டணியில் 5 இடங்களை வென்றுள்ள காங்கிரஸ் மற்றும் சில சிறிய கட்சிகள் விஜய்க்கு ஆதரவு தரலாம் என பேசப்படுகிறது.
அதே நேரத்தில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது கொளத்தூர் தொகுதியில் தோல்வியடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பல முக்கிய தலைவர்கள், TVK-வின் புதுமுக வேட்பாளர்களிடம் தோல்வியடைந்துள்ளனர்.
திருப்பத்தூரில், இரண்டு முறை அமைச்சராக இருந்த பெரியகருப்பன், ஒரே வாக்கு வித்தியாசத்தில் TVK-வின் சீனிவாச சேதுபதியிடம் தோல்வியடைந்தார்.
எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுகவின் நிலைமை இன்னும் மோசம்…
அது இப்போது மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
இருந்தாலும், EPS தனது தொகுதியில் 98 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
விஜய் தான் போட்டியிட்ட பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளார்.
ஒருவர் ஒரு தொகுதிக்கு மட்டுமே சட்டமன்ற உறுப்பினராக இருக்க முடியும் என்பதால், இந்த இரண்டில் அவர் எந்த தொகுதியை ராஜினாமா செய்வார் என்பது கேள்வியாக உள்ளது.
இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல்ஹாசன் உள்ளிட்ட பல பிரபலங்கள் மற்றும் தலைவர்கள் விஜயின் வியத்தகு சாதனைக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.
தமிழகத் தேர்தலில் விஜய் ஆதரவு அலை சுனாமியாக வீசி இந்திய அளவில் பேசும்பொருளாகியுள்ளது.



