பெட்டாலிங் ஜெயா, மே 3 – முதியவர்களை குறி வைத்து, அவர்களிடமிருந்து பணம் பறித்து வரும் சந்தேக நபரின், நடவடிக்கைகளை போலீஸ் அடையாளம் கண்டுள்ளது.
அவ்வாடவன் இதுவரை சுமார் நான்கு லட்சம் ரிங்கிட் வரையில் ஏய்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.
சமூக ஆர்வலரான குவான் சீ ஹெங் அல்லது “அங்கிள் கெந்தாங்” என்பவர் கடந்த புதன்கிழமை, அவ்வாடவன் தொடர்பான தகவல்களை தனது முகநூல் பதிவின் வாயிலாக வெளிச்சத்துக்கு கொண்டு வந்ததை அடுத்து, போலீஸ் அவனை தேடி வருகிறது.
ஆகக் கடைசியாக, சீபார்க்கில் முதியவர் ஒருவர் அவ்வாடவனிடம் 25 ஆயிரம் ரிங்கிட்டை பறிகொடுத்ததாக கூறப்படுகிறது.
2014-ஆம் ஆண்டு தொடங்கி மோசடியில் ஈடுபட்டு வருவதாக நம்பப்படும் அவ்வாடவன், அரசாங்க உதவு தொகையை பெற்றுத் தருவதாக கூறி முதியவர்களை வங்கிக்கு அழைத்துச் செல்வான்.
போகும் வழியில், மோசடி முதலீட்டு திட்டங்கள் குறித்து கூறி, அதில் பணத்தை முதலீடு செய்ய முதியவர்களை தூண்டுவான். அவனது தந்திரமாக பேச்சை நம்பி, முதியவர்கள் தங்கள் வங்கி சேமிப்பை அவனிடம் பறிகொடுத்த சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, பெட்டாலிங் ஜெயா போலீஸ் தலைவர் அசிஸ்டன் கமிஸ்னர் ஷாருல் நிசாம் ஜாப்பார் தெரிவித்தார்.
அவ்வாடவனுக்கு எதிராக இதுவரை 31 புகார்கள் பதிவாகியுள்ள வேளை ; ஆகக் கடைசியாக ஏப்ரல் 17-ஆம் தேதி, சிலாங்கூர், சீபார்க்கில் புகார் ஒன்று செய்யப்பட்டுள்ளதையும் ஷாருல் நிசாம் உறுதிப்படுத்தினார்.
பெட்டாலிங் ஜெயாவில் மட்டும் அவனுக்கு எதிராக இதுவரை ஐந்து புகார்கள் பதிவுச் செய்யப்பட்டுள்ள வேளை ; கோலாலம்பூர் உட்பட ஜோகூர், பேராக், பஹாங் ஆகிய மாநிலங்களிலும் அவன் கை வரிசையை காட்டியுள்ளது தெரிய வந்துள்ளது.