
கோலாலம்பூர், செப்டம்பர் 4 – பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், 16ஆவது பொதுத் தேர்தலை (GE16) முன்கூட்டியே நடத்துவது குறித்த கோரிக்கையைப் பரிசீலிக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். எனினும், நன்கு ஆலோசித்த பின்னரே முடிவு எடுத்து மாமன்னரிடம் சமர்ப்பிப்பேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்கூட்டிய தேர்தல் நடத்துவது குறித்து பாஸ் தலைவர் டான் ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் (Tan Sri Abdul Hadi Awang) மற்றும் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மட் ஸாஹிட் ஹமிடி, (Datuk Seri Dr Ahmad Zahid Hamidi) ஆகியோர் கருத்து தெரிவித்திருந்த நிலையில், அன்வார் இந்தப் பதிலை வழங்கினார்.
தற்போது அரசின் முக்கிய கவனம் பொருளாதாரம், மக்களின் நலன் மற்றும் ஊழல், அதிகார துஷ்பிரயோகத்தை ஒழிப்பதில் இருப்பதாக அன்வார் கூறினார். விசாரணை அமைப்புகள் ஆதாரங்களின் அடிப்படையில் நியாயமாகவும் தொழில்முறையாகவும் செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அரசாங்கம் தனது ஆட்சியைச் சிறப்பாக முன்னெடுத்துச் செல்ல மக்களிடமிருந்து பெற்றுள்ள ஆணையைப் பயன்படுத்தி, நாட்டில் ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகத்தைத் தொடர்ந்து ஒழிக்கும் என்றும் அன்வார் தெரிவித்தார்.



