
சிரம்பான், ஜன 9 – போர்ட் டிக்சன் லுக்குட்டில் உணவகத்திற்கு முன் கடந்த மாதம் மூவரை தாக்கி காயம் ஏற்படுத்தியது தொடர்பில்
மூன்று சகோதரர்கள் உட்பட அறுவர் மீது இன்று சிரம்பான் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது. 21 வயதுக்கும் 31 வயதுக்கும் உட்பட அந்த அறுவரும் நீதிபதி என். கனகேஸ்வரி முன்னிலையில் குற்றஞ்சாட்டப்பட்டனர். அவர்கள் அனைவரும் தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்தனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் தேதி இரவு மணி 8.05அளவில் பண்டார் பாரு லுக்குட், தாமான் அமானில் ஒரு உணவகத்திற்கு முன் உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு திட்டமிட்டே பாராங் கத்தியினால் மூவரை அந்த அறுவரும் வெட்டியதாக குற்றப் பத்திரிகையில் கூறப்பட்டது. இவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டால் 20 ஆண்டுகள்வரை சிறைத்தண்டனை , அபராதம் அல்லது பிரம்படி விதிக்கப்படலாம். குற்றஞ்சாட்டப்பட்ட ஒவ்வொருவருக்கும் தலா 8,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது. அதோடு அவர்கள் அனைவரும் மாதந்தோறும் அருகேயுள்ள போலீஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்பதோடு அவர்களது கடப்பிதழ்களையும் நீதிமன்றத்தில் ஒப்படைக்கும்படி
உத்தரவிடப்பட்டது. அவர்கள் மீதான குற்றச்சாட்டு எதிர்வரும் மார்ச் 11 ஆம்தேதி மீண்டும் மறுவாசிப்புக்கு செவிமடுக்கப்படும்.



