புது டெல்லி, ஜூன்-18, இந்தியப் பங்குச் சந்தையின் மதிப்பு முதன் முறையாக 5 ட்டிரில்லியன் அமெரிக்க டாலரைத் தாண்டியுள்ளது.
Bloomberg தரவுகளின்படி, இந்தியப் பங்குச் சந்தை கடந்த வாரம் முதலிடத்தைப் பிடித்து, அமெரிக்கா, சீனா, ஜப்பான் மற்றும் ஹாங்காங் ஆகிய பெரும் பொருளாதார வல்லரசுகளின் வரிசையில் சேர்ந்துள்ளது.
அதன் பரிவர்த்தனைகளில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் மூலதனத்தில், புதிதாக 1 ட்டிரில்லியன் டாலரைச் சேர்க்க இந்தியாவுக்கு ஆறு மாதங்கள் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உலகில் மிக வேகமாக வளர்ந்து வரும் அந்த பெரியப் பொருளாதாரத்தின் நடப்பு நிதிக் கொள்கைகள் தொடரும் என பிரதமர் நரேந்திர மோடியின் புதியக் கூட்டணி அரசு உத்தரவாதம் அளித்திருப்பதும், அவ்வுயர்வுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
ஆளும் பாரதிய ஜனதா கட்சி, கூட்டணி அரசாங்கத்தை அமைக்க முக்கியப் பங்காளிக் கட்சிகளிடம் இருந்து போதிய ஆதரவைப் பெற்றதில் இருந்து இந்திய பங்குச் சந்தைகள் புதிய உச்சங்களை எட்டி வருகின்றன.
மோடி அரசாங்கத்தில் பெரும்பாலான முக்கிய அமைச்சர்கள் தங்கள் இலாகாக்களை தக்க வைத்துக் கொண்டிருப்பதும் கொள்கை தொடர்ச்சியை உறுதிப்படுத்துவதாக உள்ளது.
மோடி தொடர்ந்தாற்போல் மூன்றாவது முறையாகப் பிரதமராகியது ஒரு புறமிருக்க, வலுவான பொருளாதார வளர்ச்சி மற்றும் S&P Global Ratings-சின் அண்மைய தர வரிசையில் இந்தியா ஏற்றம் கண்டிருப்பதும், உலகலாய முதலீட்டாளர்களை இந்தியா கவர்ந்திழுக்க உதவியுள்ளது.
2020-ல் 2 ட்ரில்லியன் டாலர் மதிப்பை எட்டிய இந்தியப் பங்குச் சந்தை, கடந்தாண்டு டிசம்பரில் முதன் முறையாக 4 ட்ரில்லியனைத் தொட்டது.
தற்போது அது 5 ட்ரில்லியனாக உயர்ந்திருப்பது, இந்தியப் பொருளாதாரம் வேகமாக வளர்வதன் அறிகுறி என பங்குச் சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர்.