Latestஉலகம்

யுக்ரேய்னுக்குப் புதிய அதிபர் தேவை; செலென்ஸ்கியை ‘விளாசிய’ ட்ரம்ப்

வாஷிங்டன், அக்டோபர்-11 – யுக்ரேய்னுக்கு புதிய அதிபர் தேவைப்படுவதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவுடனான போரை முடிவுக்குக் கொண்டுவரத் தவறியதாகக் கூறி, நடப்பு அதிபர் வொளோடிமிர் செலென்ஸ்கியை அவர் கடுமையாக விமர்சித்தார்.

ரஷ்யாவுடன் அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்தக்கூடிய புதியத் தலைவரை யுக்ரேய்ன் தேர்ந்தெடுக்க வேண்டும் என ட்ரம்ப் வலியுறுத்தினார்.

போரை முடிவுக்குக் கொண்டுவர செலென்ஸ்கிக்கு பல வாய்ப்புகள் கிடைத்தும், அவற்றை அவர் பயன்படுத்திக் கொள்ளவில்லை என ட்ரம்ப் குற்றம் சாட்டினார்.

இதனிடையே, ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது யுக்ரேய்ன் நடத்தி வரும் தாக்குதல்களையும் ட்ரம்ப் கண்டித்துள்ளார்.

அத்தாக்குதல்கள் உலகளாவிய டீசல் விநியோகத்தைப் பாதிப்பதோடு, அமெரிக்காவில் எரிபொருள் விலை உயர்வுக்கும் காரணமாக இருப்பதாக அவர் கூறிக் கொண்டார்.

முன்னதாக, எரிபொருள் விலையைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பரம வைரியான ரஷ்யாவிடமிருந்து டீசல் வாங்குவதற்கான ஒப்பந்தத்தை அமெரிக்கா அறிவித்திருந்தது.

ஆனால், அந்த ஒப்பந்தம் ரஷ்யாவின் போர் நடவடிக்கைகளுக்கு நிதியுதவி அளிப்பதற்குச் சமம் என செலென்ஸ்கி விமர்சித்திருந்தார்.

இதுவே ட்ரம்பின் காட்டத்துக்குக் காரணம் என நம்பப்படுகிறது.

இந்நிலையில், ட்ரம்புக்கு பதிலடியாக, யுக்ரேய்னின் அடுத்த அதிபரைத் தேர்ந்தெடுக்கும் உரிமை அந்நாட்டு மக்களுக்கே இருப்பதாக யுக்ரேய்ன் வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரி சிபிஹா (Andrii Sybiha) தெரிவித்துள்ளார்.

ரஷ்யா – யுக்ரேய்ன் போர் தொடரும் நிலையில், ட்ரம்ப்பின் இந்தக் கருத்துகள் இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல் பதற்றத்தை அதிகரித்துள்ளன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!