
குவாந்தான், அக்டோபர்-11 – பஹாங், பிரேசர்ஸ் மலையில், சாலையோரம் மலாயாப் புலி ஒன்று காணப்பட்டதைத் தொடர்ந்து, வனவிலங்குத் துறை அதிகாரிகள் 4 கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்தியுள்ளனர்.
ரவூப் – குவாலா குபு பாரு சாலையோரத்தில் புலி காணப்பட்டதாக வெளியான தகவலை அடுத்து, இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
புலி நடமாட்டம் குறித்த தகவல் வெள்ளிக்கிழமை காலை சுமார் 9 மணிக்குக் கிடைத்ததாகப் பஹாங் மாநில வனவிலங்குத் துறை இயக்குநர் Yusoff Shariff தெரிவித்தார்.
இதையடுத்து, அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டதுடன், புலியின் நடமாட்டத்தைக் கண்காணிக்க 4 கேமராக்களையும் பொருத்தினர்.
அப்பகுதியில் புலியின் நடமாட்டம் குறித்து கூடுதல் தகவல்களைப் பெறுவதற்குத் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் கூறினார்.
சாலையோரத்தில் புலி காணப்படும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி, பொது மக்களிடையே பல்வேறு கருத்துகளை வரவழைத்துள்ளன.
பெரும்பாலும் தீபகற்ப மலேசியக் காடுகளை வாழ்விடமிகக் கொண்ட நமது தேசிய விலங்கான மலாயாப் புலி, அழிவின் விளிம்பில் உள்ள உயிரினமாகும்.
2024 ஏப்ரல் வரையிலான கணகெடுப்பின் படி, வெறும் 80 முதல் 120 மலாயாப் புலிகள் மட்டுமே எஞ்சியிருப்பது கவலைக்குரிய விஷயமாகும்.



