Latestமலேசியா

நெகிரி செம்பிலான் மந்திரி பெசாருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை அனுமதிக்க மாட்டேன் – சாஹிட் ஹமிடி

கோலாலம்பூர், அக்டோபர்-11, – நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் டத்தோ இஸ்மாயில் லாசிமுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்படும் முயற்சியை அனுமதிக்கப் போவதில்லை என அம்னோ தலைவர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.

மாநில சட்டமன்றத்தின் அடுத்தக் கூட்டத்தில் அத்தகைய தீர்மானத்தைக் கொண்டுவர அம்னோ திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து அவர் இவ்வாறு கூறினார்.

இதுவரை அப்படியொரு திட்டம் குறித்து தமக்குத் தகவல் கிடைக்கவில்லை என்றும், அவ்வாறு முயற்சி மேற்கொள்ளப்பட்டாலும் அது நடைபெறாமல் பார்த்துக்கொள்வதாகவும் சாஹிட் உறுதியளித்தார்.

இதனிடையே, நெகிரி செம்பிலான் அம்னோ தலைவர் டத்தோ ஜலாலுடின் அலியாஸும் அந்தத் தகவலை மறுத்துள்ளார்.

மந்திரி பெசாருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவருவது குறித்து எந்தவொரு பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என அவர் தெளிவுப்படுத்தினார்.

மாநில நிர்வாகம் சுமுகமாக நடைபெற்று வருவதாகவும், தலைமைத்துவ நெருக்கடி எதுவும் இல்லை என்றும் ஜலாலுடின் கூறினார்.

நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றக் கூட்டத் தொடர் நவம்பர் 26-ஆம் தேதி தொடங்கவுள்ளது.

மாநிலத்தில் அரசியலமைப்பு தொடர்பான சர்ச்சை நீடித்து வரும் நிலையில், இந்த விவகாரம் கவனம் பெற்றுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!