
கோலாலம்பூர், ஏப் 16 -ஏப்ரல் 9 ஆம் தேதியன்று கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூரில் பென்டானைல் ( Fentnyl ) அடங்கிய 400 வேப் கார்ட்ரிட்ஜ்களை
( Cadridges) போலீசார் பறிமுதல் செய்ததோடு, 31 மற்றும் 33 வயதுடைய இரண்டு ஆடவர்களையும் கைது செய்ததாக புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் உசேய்ன் உமர் கான் (Hussein Omar Khan)
தெரிவித்தார்.
பூச்சோங்கில் உள்ள பண்டார் கின்ராராவில் ஒரு பட்டறையில் நடத்தப்பட்ட முதல் சோதனையில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர், பின்னர் ஒரு காரில் கண்டெடுக்கப்பட்ட 212 கிலோ எடையுள்ள, சந்தேகத்திற்கிடமான மெத்தம்பெட்டமைன் அடங்கிய 200 பொட்டலங்களைக் கடத்தியதாக நம்பப்படுவதாக அவர் கூறினார்.
அதை தொடர்ந்து மற்றொரு நபர் கைது செய்யப்பட்டதோடு வேப் கார்ட்ரிட்ஜ்களுடன், 404.12 கிலோ எடையுள்ள சந்தேகத்திற்கிடமான போதைப்பொருள் அடங்கிய 389 பொட்டலங்களும், போதை மாத்திரைகள் 5 மாத்திரைகள் அடங்கிய 1,975 அலுமினியத் தகடு பொட்டலங்களும் கண்டெடுக்கப்பட்டன என்றும் உசேய்ன் தெரிவித்தார்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் மதிப்பு சுமார் 31.6 மில்லியன் ரிங்கிட்டாகும். மேலும் இரவு விடுதிகள் மற்றும் பொழுதுபோக்கு மையங்களில் இக்கும்பல் போதைப்பொருட்களை விற்பனை செய்வதை நோக்கமாகக் கொண்டிருந்தது.
மேலும், மூன்று கார்கள் மற்றும் 15,000 ரிங்கிட் ரொக்கம் உட்பட 432,000 ரிங்கிட் மதிப்புள்ள சொத்துக்களையும் போலீஸ் பறிமுதல் செய்ததாக அவர் தெரிவித்தார்.



