
கோலாலம்பூர், ஆகஸ்ட் 18 – உலகின் பல நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் தங்கள் ஆங்கில மொழித் திறனை வெளிப்படுத்தும் HIPPO English Without Borders போட்டியில், மலேசிய இந்திய மாணவர்களும் தங்களது திறமையை அழுத்தமாகப் பதிவு செய்துள்ளனர்.
ரொமானியாவில் ஆகஸ்ட் 10 முதல் 16ஆம் தேதி வரை நடைபெற்ற 14ஆவது HIPPO ஆங்கில மொழி ஒலிம்பியாட் 2026 Play-Off Qualifiers சுற்றில் மலேசியாவைச் சேர்ந்த மூன்று இந்திய மாணவர்கள் களமிறங்கினர். அந்த மூவரின் பயணத்தில், 9 வயது சாரணி ரகுநாத்தின் சாதனை மலேசியாவுக்கு மேலும் பெருமை சேர்த்துள்ளது.
Little Hippo பிரிவில் போட்டியிட்ட சாரணி, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்களை எதிர்கொண்டு முதலிடம் பிடித்ததுடன், இத்தாலியில் நடைபெறவுள்ள HIPPO உலக இறுதிப்போட்டிக்கான தனது இடத்தையும் உறுதி செய்துள்ளார்.
ரொமானிய Play-Off சுற்றில் பங்கேற்ற மூன்று மலேசிய இந்திய மாணவர்களில், உலக இறுதிப்போட்டிக்கு முன்னேறிய ஒரே மாணவி சாரணி என்பது அவரது சாதனையை மேலும் சிறப்பாக்கியுள்ளது.
சாரணியுடன் மலேசியாவின் இளம் திறமைகளை உலக அரங்கில் பிரதிநிதித்துவப்படுத்திய மேலும் இரு மாணவர்களும் குறிப்பிடத்தக்க சாதனையைப் பதிவு செய்துள்ளனர்.
Hippo 2 பிரிவில் சிலாங்கூர் Seri Gombak இடைநிலைப்பள்ளியைச் சேர்ந்த 13 வயது தர்வேஷ் புவனேசன் நான்காவது இடத்தைப் பிடித்தார். அதே வேளை Baby Hippo பிரிவில் பேராக் Saint Philomena Convent தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த 8 வயது நேஸ்யா நெடிரா சாமும் நான்காவது இடத்தைப் பெற்று கவனத்தை ஈர்த்துள்ளார்.
70 நாடுகளைச் சேர்ந்த 108,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆரம்பச் சுற்றில் பங்கேற்ற இந்த சர்வதேசப் போட்டியில், ரொமானியா வரை சென்று Play-Off சுற்றில் போட்டியிட்டதே இந்த மூன்று இளம் மலேசியர்களுக்கும் பெருமைக்குரிய சாதனையாக அமைந்துள்ளது.
போட்டி வெறும் ஆங்கிலத் திறனை மட்டும் சோதிக்கும் மேடையாக இல்லாமல், உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களுடன் பழகவும், புதிய கலாசாரங்களை அறிந்துகொள்ளவும், சர்வதேசப் போட்டி அனுபவத்தைப் பெறவும் இவர்களுக்கு வாய்ப்பாக அமைந்தது.
தர்வேஷ் மற்றும் நேஸ்யாவின் HIPPO 2026 பயணம் ரொமானிய Play-Off சுற்றுடன் நிறைவடைந்திருந்தாலும், உலக அரங்கில் பெற்ற இந்த அனுபவமும் நான்காவது இட சாதனையும் அவர்களின் அடுத்த இலக்குகளுக்கான வலுவான தொடக்கமாக அமைந்துள்ளது.
அதேவேளையில், சாரணியின் பயணம் இன்னும் தொடர்கிறது.
வரும் செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 1ஆம் தேதி வரை இத்தாலியில் நடைபெறும் HIPPO உலக இறுதிப்போட்டியில் மலேசியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தவுள்ள 9 வயது சாரணி, தற்போது உலக அரங்கில் தனது அடுத்த சாதனையை நோக்கி தயாராகி வருகிறார்.
ரொமானியாவில் மலேசிய இந்திய மாணவர்கள் பதித்த இந்தச் சிறிய காலடிகள், நாளை உலக அரங்கில் இன்னும் பெரிய சாதனைகளாக மாறும் என்ற நம்பிக்கையையும் பெருமையையும் ஏற்படுத்தியுள்ளன.



