
ஜகார்த்தா, செப்-02-இந்தோனேசியாவின் வட சுமத்ராவில் உள்ள சினாபுங் எரிமலை மீண்டும் குமுறத் தொடங்கியுள்ளது. அதன் செயல்பாடு தீவிரமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எரிமலையிலிருந்து வெளியேறிய அடர்த்தியான சாம்பல் மற்றும் புகை கிழக்கு மற்றும் தென்கிழக்கு திசைகளை நோக்கி நகர்ந்து வருவதாகவும், நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேரடி மற்றும் கருவி வழி கண்காணிப்பில் எரிமலைச் செயல்பாடுகள் அதிகரித்திருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து நேற்று முன்தினம் மதியம் 12.30 மணிக்கு சினாபுங் எரிமலையின் எச்சரிக்கை நிலை நிலை II-லிருந்து நிலை III-க்கு உயர்த்தப்பட்டது. திங்கட்கிழமை எரிமலை முகட்டிலிருந்து சுமார் 3.5 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் வெளியேறியதுடன், கடல் மட்டத்திலிருந்து சுமார் 5.96 கிலோமீட்டர் உயரம் வரை சாம்பல் பரவியதாக அதிகாரிகள் மேலும் கூறினர்.
எரிமலைச் செயல்பாடு மேலும் தீவிரமடையக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில், Kuta Tengah பகுதியைச் சேர்ந்த 211 குடும்பங்களைச் சேர்ந்த 615 பேர் பாதுகாப்பான அவசரகால முகாம்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். எரிமலைக்கு அருகில் அமைந்துள்ள குடியிருப்புப் பகுதிகளுக்கு ஆபத்து நேரலாம் என்பதன் அடிப்படையில் முன்னெச்சரிக்கையாக அந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வேளையில், எரிமலை முகட்டிலிருந்து மூன்று கிலோமீட்டர் சுற்றளவிலும், தென்கிழக்கு திசையில் ஆறு கிலோமீட்டர் வரையிலும் எந்தவொரு நடவடிக்கையிலும் ஈடுபட பொதுமக்களுக்கும் சுற்றுப் பயணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதனிடையே, Kabupaten Karo பகுதியில் தங்கியுள்ள அல்லது அங்குப் பயணம் செய்யும் மலேசியர்கள் கூடுதல் விழிப்புடன் இருக்குமாறு மேடானில் உள்ள மலேசியத் தூதரகம் ஆலோசனை கூறியுள்ளது. சினாபுங் எரிமலையைச் சுற்றியுள்ள ஆபத்தான பகுதிகளைத் தவிர்க்குமாறும் இந்தோனேசிய அதிகாரிகள் மற்றும் உள்ளூர் பேரிடர் நிர்வாக அமைப்புகள் வழங்கும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் அது கேட்டுக் கொண்டுள்ளது.



