
இன்றைய அதிவேக மற்றும் பரஸ்பர இணைப்புகள் நிறைந்த ஊடகச் சூழலில், வைரலாகும் சம்பவங்களும் அவசரச் செய்தி சூழ்நிலைகளும் ஊடகவியலாளர்களுக்கு முக்கியமான பாடங்களை வழங்குகின்றன என்று வணக்கம் மலேசியாவின் தலைமை ஆசிரியர் தியாகாராஜன் முத்துசாமி தெரிவித்தார்.
மலேசிய பத்திரிகையாளர் கழகம் (MPI) ஏற்பாடு செய்த “Lessons Learned from Recent Viral Incidents and Breaking News Situations” என்ற கருத்தரங்கு அமர்வில் உரையாற்றிய அவர், செய்தியறையில் நேரடியாக எதிர்கொண்ட அனுபவங்களையும், அண்மையில் நாட்டில் பெரும் கவனத்தை ஈர்த்த பல வைரல் சம்பவங்களையும் எடுத்துக்காட்டாக பகிர்ந்து கொண்டார்.
நடக்கும் சம்பவங்களை உடனுக்குடன் வெளியிட வேண்டிய அழுத்தம், பத்திரிகைத்துறையின் அடிப்படை கொள்கைகளான துல்லியம், தகவல் சரிபார்ப்பு மற்றும் பொறுப்புணர்வுடன் செய்தி வெளியிடுதல் போன்றவற்றை சவாலுக்கு உட்படுத்துகிறது என்றார் தியாகராஜன்.
குறிப்பாக சமீபத்தில் ஆலயங்கள் தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்ட சரிபார்க்கப்படாத தகவல்கள், தவறான தகவல்கள் (Misinformation) மற்றும் திட்டமிட்டு பரப்பப்பட்ட பொய்த் தகவல்கள் (Disinformation) ஆகியவற்றை அவர் சுட்டிக்காட்டினார்.
இத்தகைய தகவல்கள் பொதுமக்களிடையே பதற்றத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்துவதோடு, சமூக நல்லிணக்கத்திற்கும் இன, மத ஒற்றுமைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாக அவர் எச்சரித்தார்.
“சமூக ஊடகங்களில் வைரலாகும் ஒவ்வொரு தகவலும் உண்மை அல்ல. ஒரு தகவல் அதிகமாகப் பகிரப்படுகிறது என்பதற்காக அது நம்பகமானதாக மாறிவிடாது. ஊடகவியலாளர்கள் உண்மையை உறுதிப்படுத்தும் பொறுப்பை ஒருபோதும் விட்டுக்கொடுக்கக் கூடாது,” என்று அவர் வலியுறுத்தினார்.
மேலும் ஒவ்வொரு அவசர நிகழ்வும், நெருக்கடி கால செய்தி சேகரிப்பு, செய்திஆசிரியர் முடிவெடுப்பு மற்றும் பார்வையாளர் ஈடுபாடு தொடர்பான முக்கிய பாடங்களை வழங்குவதாக தியாகராஜன் குறிப்பிட்டார்.
“வேகத்திற்கும் பொறுப்புணர்விற்கும் இடையே சரியான சமநிலையை பேணுவதே நம்பகமான ஊடகத்தின் அடையாளம். உண்மை தனது காலணியை அணிந்து வெளியே வருவதற்குள், பொய் உலகம் முழுவதும் சுற்றிவிடும் காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம். அதனால், உண்மையை உறுதிப்படுத்தும் பொறுப்பு ஊடகங்களுக்கு முன்பை விட இன்று அதிகமாகியுள்ளது,” என்றும் தியாகராஜன் தெரிவித்தார்.
இரண்டு நாட்கள் நடைபெற்ற இக்கருத்தரங்கு, மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (MCMC) ஆதரவுடன், தகவல் துறையின் ஒத்துழைப்பில் மலேசிய பத்திரிகையாளர் கழகத்தால் (MPI) ஏற்பாடு செய்யப்பட்டது.
முன்னாள் RTM தலைமை இயக்குனர் டத்தோ சுஹைமி சுலைமான், ஆஸ்ட்றோ அவானி தலைமை செய்தி ஆசிரியர் Zaiful Ariffin மற்றும் The Star நாளிதழின் துணை தலைமை செய்தி ஆசிரியர் Dr. Christina Chin ஆகியோரும் தியாகராஜனோடு இந்த அமர்வில் பங்கேற்றனர்.



