
வாஷிங்டன், ஜூன்-28-இந்தியாவின் ஹைதராபாத் நகரில் உள்ள முக்கியச் சாலை ஒன்றுக்கு தமது பெயர் சூட்டப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப் இந்தியாவுக்குத் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தை ஒட்டியுள்ள சாலைக்கு, அதிகாரப்பூர்வமாக Donald Trump Avenue என பெயர் மாற்றப்பட்டுள்ளது.
அமெரிக்க சுதந்திரத்தின் 250-வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் நிகழ்வின் ஒரு பகுதியாக, இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் Sergio Gor மற்றும் தெலுங்கானா துணை முதல்வர் மல்லு பட்டி விக்ரமார்கா ஆகியோரால் இதற்கான நினவுப் பலகை திறந்து வைக்கப்பட்டது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கௌரவத்தைப் பெற்ற முதல் அமெரிக்க அதிபர் தாம் தான் எனக் குறிப்பிட்டு, ட்ரம்ப் தனது சமூக ஊடகப் பக்கத்தில் புகைப்படங்களைப் பகிர்ந்து நன்றிக் கூறியுள்ளார்.
இருப்பினும், தெலுங்கானாவை ஆளும் காங்கிரஸ் அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை, இந்தியாவில் ஒரு பெரிய அரசியல் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
ட்ரம்பின் கொள்கைகளைக் கடுமையாக விமர்சிக்கும் காங்கிரஸ் கட்சி, தற்போது அவருக்குச் சாலை பெயரிட்டிருப்பது “முற்றிலும் இரட்டை வேடம்” என்று பிரதமர் நரேந்திர மோடியின் பாரதீய ஜனதா கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
ஆனால், அமெரிக்காவுடனான ஹைதராபாத்தின் தொழில்நுட்பம் மற்றும் முதலீட்டுத் தொடர்புகளை வலுப்படுத்தும் நோக்கில் இந்த உலகளாவிய அடையாளம் உருவாக்கப்பட்டதாக மாநில அதிகாரிகள் விளக்கியுள்ளனர்.



