Latestஉலகம்

ஃபுஜி மலையைப் படமெடுப்பதைத் தடுக்க போடப்பட்ட வலைத் தடுப்பிலேயே ஓட்டைகள்; ஜப்பானிய அதிகாரிகள் அதிர்ச்சி

தோக்யோ, மே-28 – உலகப் புகழ்பெற்ற ஃபுஜி மலையை சுற்றுப்பயணிகள் தூரத்தில் இருந்து படமெடுப்பதை தடுப்பதற்காகப் போடப்பட்ட வலைத் தடுப்பிலேயே ஓட்டைகள் போடப்பட்டிருப்பது ஜப்பானிய அதிகாரிகளை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஃபுஜிகாவாகுஜிக்கோ நகரில்
Lawson கடைக்கு அருகில் வெளிநாட்டு சுற்றுப்பயணிகள் கூடி நின்று, ஃபுஜி மலையைத் தூரத்திலிருந்து படம்பிடிக்கும் போது விதிமுறைகளை மீறி அசௌகரியத்தைக் கொடுப்பதாக அப்பகுதி வாழ் மக்கள் முன்னதாக புகார் அளித்திருந்தனர்.

இதையடுத்து ஃபுஜி மலையைப் படமெடுக்க முடியாதபடி, அந்நகரில் இருந்து மலையைப் பார்க்கும் இடத்தில் 2.5 மீட்டர் உயரத்திலும், 20 மீட்டர் அகலத்திலும் கறுப்பு வலைத் தடுப்பு போடப்பட்டது.

வலை ஃபுஜியை மறைக்கும் என்பதால் சுற்றுப் பயணிகள் அங்கு வரமாட்டார்கள்; இதனால் அப்பகுதி வாழ் மக்களுக்கும் நிம்மதி என அதிகாரிகள் நம்பினர்.

ஆனால், தடுப்பு போடப்பட்ட மறுநாளே வலையில் 10-க்கும் மேற்பட்ட ஓட்டைகள் போடப்பட்டது கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

கோபத்தில் சுற்றுப்பயணிகள் அவ்வாறு செய்வார்கள் என்பது எதிர்ப்பார்க்கப்பட்டது தான் என்றாலும், இவ்வளவு சீக்கிரத்தில் அது நடக்கும் என நினைக்கவில்லை என அவர்கள் கூறினர்.

அதோடு, தடுப்பு போட்டும் பயனில்லாமல் போன கதையாக, சுற்றுப்பயணிகள் மாற்று இடத்தைக் கண்டு பிடுத்து விட்டனர்.

தடுப்புப் போடப்பட்ட இடத்தில் இருந்து 1 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மற்றொரு Lawson கடைக்கு முன்புறம் இருந்தவாறு ஃபுஜி மலையை அவர்கள் புகைப்படம் எடுத்து வருகின்றனர்.

இதனால் விரக்தியடைந்தாலும், மேலுமொரு தடுப்பைப் போட திட்டமேதும் இல்லை என நகர மேயர் தெரிவித்தார்.

சுற்றுப்பயணிகள் விதிமுறைகளைப் பின்பற்றினால், ஏற்கனவே போடப்பட்ட தடுப்பு அகற்றப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!