அடுத்த வல்லரசு: 40- 50 ஆண்டுகளில் இந்தியாவே உலகை வழிநடத்தும் என டோனி அபோட் கணிப்பு

புது டெல்லி, அக்டோபர்-18,
“அடுத்த 40 முதல் 50 ஆண்டுகளில், இந்தியப் பிரதமராக யார் இருந்தாலும் அவர் தான் சுதந்திர உலக நாடுகளின் தலைவராக இருப்பார்; எனவே 21-ஆம் நூற்றாண்டு இந்தியாவுக்கே சொந்தமானது” என ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமர் டோனி அபோட் (Tony Abbot) புகழாரம் சூட்டியுள்ளார்.
அச்சமயத்தில் உலகின் புதிய வல்லரசு நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறியிருக்கும்; தவிர ஆசிய – பசிஃபிக் வட்டாரத்தில் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முன்னிலையில் இருக்கும் என்றார் அவர்.
இந்தியாவின் ஜனநாயகம், சட்ட முறைப்படியான ஆட்சி, ஆங்கில மொழியின் பரவலான பயன்பாடு ஆகியவை சீனாவை விட இந்தியாவுக்கு கூடுதல் பலமாக உள்ளன.
இந்நிலையில், அந்நாடு அதன் சீர்திருத்தங்கள் மற்றும் அனைத்துலக பங்காளித்துவத்தைத் தொடர்ந்தால், உலகத்தில் நெறிமுறையிலும் பொருளாதாரத்திலும் ஒரு முக்கியமான தலைவராக இந்தியா மாறும் என்றும் அபோட் கணித்துள்ளார்.
புது டெல்லியில் நடைபெற்ற NDTV World Summit 2025 நிகழ்ச்சியில் உரையாற்றும்போது அவர் அவ்வாறு சொன்னார்.