Latestமலேசியா

அமைச்சர் -அதிகாரி இடையிலான மோதல் பணி நீக்கத்தில் முடிந்தது.

கோலாலம்பூர், பிப்ரவரி 24 – மலேசிய சுற்றுலாத் துறையை விளம்பரப்படுத்தும் வாரியமான Tourism Malaysia-வின் தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் அம்மார் அப்துல் கப்பார் அதிரடியாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அவரின் பணி நீக்கம் வரும் திங்கட்கிழமை பிப்ரவரி 26-ஆம் தேதி அமுலுக்கு வருகிறது.

டத்தோ அம்மாரின் சேவை முடிவுக்குக் கொண்டு வரும் ஆணை அடங்கிய கடிதத்தில் சுற்றுலா, கலை, பண்பாட்டுத் துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ தியோங் கிங் சிங் நேற்று முன்தினம் கையெழுத்திட்டதாக தெரிகிறது.

அமைச்சரின் உத்தரவுகளைப் பின்பற்ற மறுத்ததாலேயே அம்மாரின் சேவை முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதாக அறியப்படுகிறது.

அம்மார், மோசமான அடைவுநிலையோடு, அமைச்சரின் உத்தரவுகளை பின்பற்றாமல் இருப்பதையே வழக்கமாகக் கொண்டிருந்தாகவும் அமைச்சின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

போக்கை மாற்றிக் கொள்வதற்கு அமைச்சர் ஓராண்டு கால அவகாசம் வழங்கியும், அதில் அம்மாரிடம் மாற்றம் தெரியாததால் அவரின் சேவை முடிவுக்கு வந்திருக்கின்றதாம்.

நிலைமை இவ்வாரிருக்க, தமது சேவை முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது குறித்து அம்மார் ஏமாற்றம் தெரிவித்துள்ளார்.

அமைச்சரைச் சந்திக்க நேரம் கேட்ட போதேல்லாம் பதிலே வரவில்லை என்றும், தமது அடைவுநிலை குறித்த கேள்விக்கும் அமைதியே பதிலாக இருந்ததாகவும் கூறினார்.

தாம் சரியாக வேலை செய்யவில்லை என்றால், சுற்றுப் பயணிகளின் எண்ணிக்கை உயர்வு கண்டது எப்படி என எதிர் கேள்வியையும் அம்மார் முன் வைத்தார்.

எனவே, தாம் பணி நீக்கப்பட்டதற்கான உண்மைக் காரணம், பணி நீக்க கடித்தத்தில் கையெழுத்திட்ட அமைச்சருக்கே வெளிச்சம் என அம்மார் சாடினார்.

36 ஆண்டுகள் சேவையாற்றிய அனுபவத்தைக் கொண்டிருக்கும் தம்மை இப்படி நடத்தியிருக்கக் கூடாது என அவர் ஏமாற்றத்துடன் சொன்னார்.

இவ்வேளையில், அமைச்சருக்கும் Tourism Malaysia தலைமை இயக்குநருக்கும் இடையிலான ‘மோதல்’ குறித்து கவலை தெரிவித்த மலேசிய சுற்றுலா சம்மேளனம், அந்த பணி நீக்கத்திற்கு விளக்கம் தேவை என்பதுடன் அதில் வெளிப்படைத் தன்மையும் அவசியம் என வலியுறுத்தியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!