Latestமலேசியா

ஆடவர் காயம் ; சுங்கை சிப்புட்டில், மூன்று நண்பர்களுக்கு தலா ஈராயிரம் ரிங்கிட் அபராதம்

சுங்கை சிப்புட், மார்ச் 15 – ஆடவர் ஒருவரை காயப்படுத்திய குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டதை அடுத்து, மூன்று இந்திய ஆடவர்களுக்கு, தலா ஈராயிரம் ரிங்கிட் அபராதம் விதித்து, பேராக், சுங்கை சிப்புட் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

23 வயது கே.லிங்கேஸ்வரன், 23 வயது எஸ்.தினகரன், 24 வயது எம்.ஆகாஸ்குமார் ஆகிய அம்மூவரும் அபராதத்தை செலுத்த தவறும் பட்சத்தில், ஐந்து மாதங்கள் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டுமென மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

எனினும், அவர்களின் நண்பர்களான, 21 வயது எஸ்.குணசேகரன், 22 வயது கே.லோகன், 26 வயது எ.இக்நிஸ்ராவ், 23 வயது எம்.நாகராஜ் மற்றும் 24 வயது ஆர்.நரேஸ் ஆகியோர் தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினர்.

28 வயது வி.அரவிந் நாயர் எனும் ஆடவனை அடித்துக் காயப்படுத்த வேண்டும் எனும் நோக்கில், அந்த எட்டு பேரும் சட்டவிரோத ஒன்றுகூடலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.

இம்மாதம் 11-ஆம் தேதி, இரவு மணி 9.30-க்கும் 11.15-க்கும் இடைப்பட்ட நேரத்தில், தாமான் துன் சம்பந்தனுக்கு அருகேயுள்ள சாலையில் அவர்கள் அக்குற்றத்தை புரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றத்தை மறுத்து விசாரணை கோரியுள்ள ஐவரையும், இன்று ஈராயிரத்து 500 ரிங்கிட் உத்தரவாதத் தொகையில் விடுவிக்க மாஜிஸ்திரேட் அனுமதி வழங்கிய வேளை ; இவ்வழக்கு விசாரணை ஏப்ரல் 15-ஆம் தேதி செவிமடுக்கப்படும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!