Latestமலேசியா

ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் உட்பட 1,176 ஓட்டுநர் பணியிடங்கள் காலி: சுகாதார அமைச்சு

கோலாலம்பூர், நவ-02-நாடு முழுவதும் உள்ள சுகாதார அமைச்சின் சுகாதார நிலையங்களில், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் உட்பட மொத்தம் 1,176 வாகன ஓட்டுநர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் பணியில் உள்ள ஓட்டுநர்களின் பணிச்சுமை அதிகரித்துள்ளது. அதோடு இப்பற்றாக்குறை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2024ஆம் ஆண்டு புதிய பொதுச் சேவை ஊதிய முறையை (SSPA) அறிமுகப்படுத்துவதற்காக, பொதுச் சேவை ஆணையம் (SPA) மூலம் ஆள்சேர்ப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டதே இப்பற்றாக்குறைக்குக் காரணம் என அமைச்சு தெரிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து, முந்தைய வாகன ஓட்டுநர் பணித்திட்டம், திறன் சேவைகள் வகைப்பாட்டின் கீழ் ‘பொதுச் சேவை உதவியாளர் (ஓட்டுநர்)’ என்ற புதிய திட்டமாக மாற்றியமைக்கப்பட்டது. இதற்காகப் பணிக்கான தகுதிகள் மற்றும் பொறுப்புகள் மறுஆய்வு செய்யப்பட்டதாகவும் அமைச்சு கூறியது.

கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி நிலவரப்படி, நாடு முழுவதும் இப்பணிக்காக 8,863 இடங்கள் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவற்றில் 7,687 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. தீபகற்ப மலேசியாவில் அதிகபட்சமாக 1,003 இடங்களும், சரவாக்கில் 92 இடங்களும், சபாவில் 73 இடங்களும், லாபுவானில் எட்டு இடங்களும் காலியாக உள்ளன. இந்தப் பணியிடங்களை 2027 ஏப்ரல் முதல் படிப்படியாக நிரப்ப அமைச்சு திட்டமிட்டுள்ளது.

இதற்கான ஆள்சேர்ப்பு நடைமுறைகள் பொதுச் சேவை ஆணையத்துடன் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், ஓட்டுநர் திறன் தேர்வு (UKP) அக்டோபர் 27ஆம் தேதி நிறைவடைந்ததாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும், ஏற்கெனவே பணியில் உள்ள பொதுச் சேவை உதவியாளர்களையும், தேவைக்கேற்ப ஓட்டுநர் பணிகளில் ஈடுபடுத்த முடியும். இதற்கு அவர்கள் உரிய ஓட்டுநர் தேர்வுகள் மற்றும் திறன் மதிப்பீடுகளில் தேர்ச்சி பெற வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் கீழ் 400 புதிய ஆம்புலன்ஸ்கள் கொள்முதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், நாடு முழுவதும் உள்ள அரசு சுகாதார நிலையங்களில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்குப் பற்றாக்குறை நிலவுவதாக அக்டோபர் 16ஆம் தேதி வெளியான செய்தியைத் தொடர்ந்து, அமைச்சு இந்த விளக்கத்தை அளித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!