கோலாலம்பூர், ஏப்ரல் 2 – ஹரி ராயா உதவித் தொகையை பெறவுள்ள அரசாங்க பணியாளர்களும், STR – ரஹ்மா உதவித் தொகையை பெற உள்ளவர்களும், இணைய மோசடி கும்பல்களை நம்பி ஏமாற வேண்டாம் என, தகவல் தொடர்பு அமைச்சர் பாஹ்மி பட்சேல் நினைவுறுத்தியுள்ளார்.
மக்களுக்கான அந்த நற்செய்திகளை, பொறுப்பற்ற சில தரப்பினர் தவறாக பயன்படுத்திக் கொள்வதை தாம் விரும்பவில்லை என பாஹ்மி குறிப்பிட்டார்.
அதனால், கூடுதல் கவனமுடனும், விழிப்புடனும் இருக்குமாறு அவர் பொதுமக்களை கேட்டுக் கொண்டார்.
குறிப்பாக, மின்னச்சல், வாட்ஸ்அப் உட்பட சமூக ஊடகங்கள் வாயிலாக பகிரப்படும் இணைப்பை திறக்கவோ, செயலிகளை பதிவிறக்கம் செய்யவோ வேண்டாம் என பாஹ்மி வலியுறுத்தினார்.
தெரிந்தவர்களிடம் இருந்து வரும் குறுஞ்செய்தியாக இருந்தாலும், நம்பகத்தன்மையை ஆராயாமல் செயல்பட வேண்டாம் என்றாரவர்.
கிரேட் 56 நிலைக்கு கீழ்பட்ட அரசாங்க ஊழியர்கள் இவ்வாரம் வெள்ளிக்கிழமை சிறப்பு ஹரி ராயா நிதியுதவியை பெறவுள்ள வேளை ; நாளை தொடங்கி, இரண்டாம் கட்ட STR உதவித் தொகை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.