Latestமலேசியா

இந்தியப் போதைப் பொருள் கடத்தல் மன்னனுக்கும் மலேசிய பிரபலத்துக்கும் தொடர்பா? போலீஸ் மறுப்பு

கோலாலம்பூர், மார்ச்-12 – இந்தியாவில் கைதாகியுள்ள பிரபல போதைப் பொருள் கடத்தல் மன்னனுக்கும், மலேசியாவுக்கும் தொடர்பேதும் இல்லை என போலீஸ் உறுதிபடுத்தியுள்ளது.

சினிமா தயாரிப்பாளருமான ஜாஃப்பர் சதிக், மலேசியா உள்ளிட்ட அனைத்துலகப் போதைப் பொருள் கடத்தல் கும்பல்களுடன் தொடர்பு வைத்திருப்பதாக வெளியாகியுள்ள தகவல்களை மறுத்துப் பேசிய போது, புக்கிட் அமான் போதைப் பொருள் புலனாய்வுத் துறையின் இயக்குநர் டத்தோ காவ் கோக் ச்சின் அவ்வாறு சொன்னார்.

“ ஜாஃப்பர் சதிக் மூளையாக இருந்து செயல்படுத்தும் அந்தப் போதைப் பொருள் கடத்தல் கும்பலுக்கு, மலேசியாவைச் சேர்ந்த சினிமா முக்கியப் புள்ளி ஒருவர் தலைமை வகிப்பதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.”

“ஆனால், நாங்கள் இதுவரை மேற்கொண்ட விசாரணையில், அச்செய்தி உண்மையில்லை என தெரிய வந்துள்ளது. மலேசியாவில் போதைப் பொருள் விநியோகத்தில், இந்நாட்டு பிரஜை எவருடனும் சதிக் ஈடுபடவும் இல்லை, தொடர்பும் கொண்டிருக்கவில்லை” என டத்தோ காவ் சொன்னார்.

எனினும், அரச மலேசியக் காவல் படை தொடர்ந்து உளவு நடவடிக்கைகளையும், மேற்கொண்டு விசாரணைகளையும் நடத்தி வரும் என்றார் அவர்.

கடந்த சனிக்கிழமை இந்திய போதைப் பொருள் கட்டுப்பாட்டு வாரியத்தால் கைது செய்யப்பட்ட சதிக்கை, பின்னால் இருந்து இயக்குவதே மலேசியாவைச் சேர்ந்த சினிமா பிரபலம் ஒருவர் தான் என இந்தியாவைச் சேர்ந்த பிரபல ஊடகவியலாளர் ஒருவர் You Tube பேட்டியில் கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

எனினும், அது குறித்து தங்களுக்கு அறிக்கை எதுவும் கிடைக்கப் பெறவில்லை என PDRM கூறியிருந்தது.

சதிக்கின் விவரங்கள், மலேசியாவில் போதைப் பொருள் விநியோகம் தொடர்பான தரவுத் தளம் எதிலும் இல்லை என தேசியக் காவல் படைத் தலைவர் தான் ஸ்ரீ ரசாருடின் ஹுசாய்ன் தெளிவுப்படுத்தியிருந்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!