Latestமலேசியா

இந்து சமயச் சடங்கில் பங்கேற்றதாகக் கூறப்படும் முஸ்லீம் ஆடவர்; விசாரணைக்கு உத்தரவு

புத்ராஜெயா, அக்டோபர்-11 – இஸ்லாம் அல்லாத பிற சமயச் சடங்கில் முஸ்லீம் ஆடவர் ஒருவர் பங்கேற்றதாகக் கூறப்படும் வைரல் வீடியோ தொடர்பில், அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பத்து மலை திருத்தலத்தில் தைப்பூசச் சமயச் சடங்கில் முஸ்லீம் ஆடவர் ஒருவர் பங்கேற்பதைக் காட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியதைத் தொடர்ந்து, இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ள சம்பவத்தை அரசாங்கம் கடுமையாகக் கருதுவதாக இஸ்லாமிய சமய விவகாரங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் Dr சுல்கிஃப்லி ஹசான் தெரிவித்தார்.

குறிப்பாக, வழிபாட்டு நடவடிக்கைகள் மற்றும் குறிப்பிட்ட மந்திரங்களை உச்சரிப்பது போன்ற அம்சங்கள் அதில் இடம்பெற்றிருப்பதாகக் கூறப்படுவதை அவர் சுட்டிக்காட்டினார்.

இதுதொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இணைந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், நடைமுறையில் உள்ள சட்ட விதிகளுக்கு ஏற்ப அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

முஸ்லீம்களின் இஸ்லாமிய சமய நம்பிக்கையைப் பாதுகாப்பதில் அரசாங்கம் உறுதியாக இருப்பதாகவும், அந்த நம்பிக்கைக்கு முரணானவை என நிரூபிக்கப்படும் நடவடிக்கைகளை அனுமதிக்க முடியாது என்றும் சுல்கிஃப்லி தெரிவித்தார்.

இருப்பினும், உண்மையான தகவல்கள் மற்றும் விசாரணை முடிவுகளின் அடிப்படையிலேயே எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றார் அவர்.

இதன் மூலம் நீதி நிலைநாட்டப்படுவதோடு, நாட்டின் பல இன, சமய மக்களிடையேயான நல்லிணக்கமும் பாதுகாக்கப்படும் என அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!