Latestமலேசியா

இந்தோனேசியாவில் தங்களுக்கு எதிராக எந்தவொரு விசாரணையும் நடக்கவில்லை – Maybank விளக்கம்

கோலாலம்பூர், ஜூன்-11 – மலேசியாவின் முன்னணி நிதி நிறுவனமான Maybank, இந்தோனேசிய அதிகாரிகளால் தாங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாக வெளியாகி வரும் ஊடகச் செய்திகள் மற்றும் வதந்திகளைத் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இதுகுறித்து மலேசியப் பங்குச் சந்தைக்கு சமர்ப்பிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், Maybank நிறுவனம் அல்லது இந்தோனேசியாவில் உள்ள அதன் துணை நிறுவனமான PT Bank Maybank Indonesia Tbk ஆகிய இரு நிறுவனங்களுக்கும் எதிராக அந்த நாட்டின் எந்தவொரு நிர்வாக அமைப்போ அல்லது அதிகாரிகளோ எவ்வித விசாரணையும் மேற்கொள்ளவில்லை என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

தங்களின் வட்டாரச் செயல்பாடுகள் அனைத்தும் இந்தோனேசியாவின் உள்ளூர் சட்டதிட்டங்கள், நிதி விதிமுறைகள் மற்றும் நிர்வாகத் தரநிலைகளுக்கு உட்பட்டே மிகக் கடுமையான முறையில் நடத்தப்பட்டு வருவதாக அந்த வங்கிக் குழுமம் சுட்டிக்காட்டியது.

இந்தோனேசியாவில் தங்களின் வணிகச் செயல்பாடுகள் எவ்வித தடையுமின்றி வழக்கம் போல் சுமூகமாக நடந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ள Maybank நிர்வாகம், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், வங்கியின் நிலை குறித்து அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் வணிகத் தகவல்களை மட்டுமே முதலீட்டாளர்களும் பங்குதாரர்களும் நம்ப வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.

இந்தோனேசியாவின் மிகப்பெரிய செம்பனை எண்ணெய் நிறுவனங்களில் ஒன்றான PT Salim Ivomas Pratama-வின் ஏற்றுமதி பரிவர்த்தனைகள் மதிப்பைத் தரம் குறைத்துக் காட்டியதாக எழுந்த சந்தேகத்தின் பேரில், இந்தோனேசிய அதிகாரிகள் ஜகார்த்தாவில் உள்ள Maybank வங்கியாளர்களிடம் விசாரணை நடத்தியதாக, Bloomberg முன்னதாக செய்தி வெளியிட்ட நிலையில், இந்த மறுப்பு அறிக்கை வெளியாகியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!