
சென்னை, ஜூன்-27-தமிழ்த் திரையுலகில் “திரைக்கதை மன்னன்” என்று போற்றப்படும் பிரபல நடிகரும், இயக்குநருமான கே. பாக்யராஜ் இன்று காலையில் மாரடைப்பு காரணமாகத் தனது 73-ஆவது வயதில் காலமானார்.
ஒட்டு மொத்த திரையுலகையே இச்செய்தி கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இன்று காலை அவரது உயிர் பிரிந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
புகழ்பெற்ற இயக்குநர் பாரதிராஜா அவர்களிடம் உதவி இயக்குநராகத் தனது திரைப்பயணத்தைத் தொடங்கிய பாக்யராஜ், 1979-ஆம் ஆண்டு ‘சுவரில்லாத சித்திரங்கள்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.
தொடர்ந்து ‘அந்த ஏழாவது நாள்’, ‘முந்தானை முடிச்சு’, ‘சின்ன வீடு’, ‘தூறல் நின்னு போச்சு’ என எண்ணற்ற யதார்த்தமான குடும்பக் கதைகள், இயல்பான நகைச்சுவை மற்றும் தனித்துவமான திரைக்கதை மூலம் இரசிகர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்தார்.
அண்மையில் தான் சினிமாவில் இவர் பொன்விழா ஆண்டைக் கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.
80-களில் புகழ்பெற்ற கதாநாயகிகளில் ஒருவரான பூர்ணிமா இவரின் துணைவியாவார்.
சிறந்த திரைக்கதை மற்றும் வசனங்களுக்காகப் பல ஃபிலிம்பேர் மற்றும் மாநிலத் திரைப்பட விருதுகளை வென்றுள்ள அவரது மறைவு, ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகிற்கும் ஈடுசெய்ய முடியாத பெரும் இழப்பாகும்.



