Latestமலேசியா

‘இரட்டை நிலை அரசியல் வேண்டாம்’; அமானா, பாஸ் கட்சிக்கு உள்ள கொள்கை வேறுபாடு என்ன? – அந்தோனி லோக்கிடம் விக்னேஸ்வரன் கேள்வி

கோலாலம்பூர் – அமானா கட்சியுடன் இணைந்து செயல்படுகின்ற DAP, அதே நேரத்தில் பாஸ் கட்சியை மட்டும் தீவிரவாத போக்குடையது போல் சித்தரிப்பது ஏன் என ம.இ.கா தலைவர் டான் ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாஸுடன் பாரிசான் நேஷனல் (BN) இணையும் சாத்தியம் குறித்து ம.இ.கா-வின் நிலைப்பாட்டை தொடர்ந்து விமர்சிப்பதற்கு முன், அமானா மற்றும் பாஸ் கட்சிகளுக்கிடையிலான அடிப்படை கொள்கை வேறுபாடு என்ன என்பதை DAP பொதுச்செயலாளர் அந்தோனி லோக் மக்களுக்கு விளக்க வேண்டும் என்று அவர் சவால் விடுத்தார்.

“அமானாவுடன் DAP இணைந்து செயல்பட முடிகிறது. ஆனால் பாஸ் மட்டும் அச்சுறுத்தலாக சித்தரிக்கப்படுகிறது. இரு கட்சிகளின் கொள்கையில் உண்மையில் என்ன வித்தியாசம் என்பதை விளக்கவும். அதைவிடுத்து வெறும் முத்திரை குத்துவது சரியான அரசியல் அல்ல,” என்று விக்னேஸ்வரன் கூறினார்.

பாஸ் உண்மையில் சமூகத்திற்கு அச்சுறுத்தலாக இருந்தால், அரசிடம் பல்வேறு அதிகாரங்கள், குறிப்பாக 3R தொடர்பான சட்டங்கள் உள்ள நிலையில், ஏன் அந்தக் கட்சி இன்னும் சட்டபூர்வமாக செயல்பட அனுமதிக்கப்படுகிறது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

மக்கள் எதிர்கொள்ளும் வாழ்க்கைச் செலவு, பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு போன்ற பிரச்சினைகளில் கவனம் செலுத்தும் வகையில் அரசியல் விவாதங்கள் இருக்க வேண்டுமே தவிர, குறிப்பிட்ட கட்சிகளை குறிவைத்து எதிர்மறை அரசியலை நடத்தக் கூடாது என்றும் விக்னேஸ்வரன் வலியுறுத்தினார்.

மேலும், பாஸ் குறித்து DAP தொடர்ந்து உருவாக்கும் அரசியல் பேச்சு, மலாய் சமூகத்தில் DAP மீதான எதிர்மறை எண்ணத்தையே அதிகரிக்கிறது என்றும், மக்கள் தற்போது வெறும் அரசியல் வாதங்களையும் அதிகாரப் போட்டிகளையும் விட நடைமுறை தீர்வுகளையே எதிர்பார்க்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!