
கோலாலம்பூர், செப் 8- உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் அரிசி பற்றாக்குறை பிரச்சனைக்குத் தீர்வு காணும் முயற்சியாக உள்நாட்டு வெள்ளை அரிசியின் விற்பனையில் கட்டுப்பாட்டை அரசாங்கம் அமல்படுத்தியுள்ளது. ஒரு பயனீட்டாளர் 100 கிலோ அரிசியை மட்டுமே வாங்குவதற்கு அனுமதிக்கப்படுவதாக விவசாய மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சின் விவசாய தொழில் மேம்பாட்டு பிரிவின் செயலாளர் டத்தோ அஸ்மான் மாமூட் தெரிவித்தார். உள்நாட்டில் வெள்ளை அரிசியின் விநியோகம் நிலைத்தன்மை அடையும்வரை இந்த விற்பனை வரையரை அமல்படுத்தப்படும் என அவர் கூறினார்.
உள்நாட்டிலுள்ள மளிகைக் கடைகள் உள்நாட்டு அரிசி பற்றாக்குறையை எதிர்நோக்கியதைத் தொடர்ந்து முதல் கட்டமாக நாளை முதல் விற்பனை வரையரை தொடங்கப்படும் என்றும் அதன் இரண்டாவது கட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கும் என்றும் Azman தெரிவித்தார். செப்டம்பர் 15ஆம் தேதி முதல் பசார் தானி மற்றும் தனது கிளைகளிலும் விற்பனை வரையரையை கூட்டரசு விவசாய சந்தை வாரியமான ‘Fama’ அமல்படுத்தும் என்றும் அவர் கூறினார். உள்நாட்டில் நெல் அறுவடை தரத்தைப் பொறுத்தே உள்நாட்டு அரிசியின் விநியோகம் இருப்பதையும் அஸ்மான் சுட்டிக்காட்டினார்.