Latestமலேசியா

ஐஸ்வர்யா ராயின் ஆடையை தைப்பூசக் காவடியுடன் ஒப்பிடுவதா? Chef Wan-னுக்கு டத்தோ சிவகுமார் நடராஜா கண்டனம்

கோலாலம்பூர், மே-27, பிரசித்திப் பெற்ற Cannes திரைப்பட விழாவில் முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் அணிந்திருந்த ஆடையை, தைப்பூச திருநாளுடன் ஒப்பிட்டு பேசிய பிரபல சமையல் கலைஞர் Chef Wan-னின் செயல், வரம்பு மீறிய ஒன்றாகும்.

Chef Wan ஒரு நகைச்சுவையாகவே அதனைக் கூறியிருந்தாலும், இந்தியர்கள் குறிப்பாக இந்துக்களால் அதை ஏற்றுக் கொள்ள முடியாது என கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் அறங்காவலர் டத்தோ சிவகுமார் நடராஜா கூறினார்.

மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் என்ற வகையில் Chef Wan இன்னும் அதிகப் பொறுப்போடு நடந்துக் கொண்டிருக்க வேண்டும்.

பல்லின மக்கள் வாழும் இந்நாட்டில் நமது பேச்சும் செயலும் இன்னொருவரின் மனதைப் புண்படுத்தா வண்ணம் இருக்க வேண்டும் என்பது மூத்தவரான அவருக்குத் தெரியாத ஒன்றல்ல.

இருந்தும் அப்படியொரு நகைச்சுவையை அவர் கூறியிருப்பது தமக்கு ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருப்பதாக டத்தோ சிவகுமார் அறிக்கையில் கூறினார்.

Cannes திரைப்பட விழாவின் சிவப்புக் கம்பள வரவேற்பின் போது ஐஸ்வர்யா ராய் அணிந்திருந்த ஆடை ஏதோ அவர் பத்துமலை தைப்பூசத்தில் காவடி ஏந்திச் செல்வது போல் இருக்கிறது என Chef Wan சமூக ஊடகத்தில் கருத்து பதிவிட்டு முன்னதாக சர்ச்சையில் சிக்கினார்.

பல்லின மக்களாலும் விரும்பப்படும் அவரிடம் இருந்து அப்படியொரு கருத்தை எதிர்பார்க்காத நெட்டிசன்கள், அதுவோர் இனவாதக் கூற்று என அவருக்குக் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் அவ்விவகாரம் பூதாகரமாகி இன நல்லிணக்கத்தைப் பாதிக்கும் முன்பே, அதிகாரத் தரப்பு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என டத்தோ சிவகுமார் வலியுறுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!