Latestமலேசியா

கங்கார் தமிழ்ப்பள்ளிக்கு இந்திய உயர் ஆணையர் சோம்நாத் கோஷ் வருகை; மாணவர்கள், ஆசிரியர்கள் உற்சாக வரவேற்பு

கோலாலம்பூர், அக்டோபர் 29 – மலேசியாவுக்கான இந்திய உயர் ஆணையர் சோம்நாத் கோஷ் (Somnath Ghosh), முதன்முறையாகப் பெர்லிஸ் கங்கார் தமிழ்ப்பள்ளிக்கு அக்டோபர் 28ஆம் தேதி அதிகாரத்துவ வருகை மேற்கொண்டார்.

பெர்லிஸுக்கு இரண்டு நாள் அதிகாரத்துவப் பயணமாக அக்டோபர் 27ஆம் தேதி வருகை தந்த அவர், தனது பயணத்தின் இரண்டாம் நாளில் கங்கார் தமிழ்ப்பள்ளியைப் பார்வையிட்டார்.

பள்ளியின் தலைமை ஆசிரியர் உதயகுமார் (Uthaya Kumar) தலைமையில் ஆசிரியர்களும் மாணவர்களும் அவருக்கு உற்சாகமான வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வில், தலைமை ஆசிரியர் உதயகுமார் வரவேற்புரை ஆற்றி, இந்திய உயர் ஆணையரின் வருகைக்கு நன்றி தெரிவித்தார். மேலும், மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும் சர்வதேச அறிவைப் பெறுவதற்கும் இத்தகைய சந்திப்புகள் முக்கியத்துவம் வாய்ந்தவை எனக் குறிப்பிட்டார்.

           

அப்போது, மாணவர்களை இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோவுக்கு (ISRO) கல்விச் சுற்றுப்பயணமாக அழைத்துச் செல்லும் தனது விருப்பத்தையும் அவர் வெளிப்படுத்தினார். இதன் மூலம் மாணவர்கள் விண்வெளி அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சித் துறைகள் குறித்து நேரடி அனுபவத்தைப் பெறுவதுடன், எதிர்காலக் கல்வி இலக்குகளை நிர்ணயிக்கவும் ஊக்கம் பெறுவார்கள் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இதற்குப் பதிலளிக்கும் வகையில் உரையாற்றிய இந்திய உயர் ஆணையர் சோம்நாத் கோஷ், கங்கார் தமிழ்ப்பள்ளி மாணவர்களை இஸ்ரோவுக்கு அழைத்துச் செல்வது தொடர்பான கோரிக்கையைப் பரிசீலிப்பதாகத் தெரிவித்தார். அவரது இந்தக் கருத்து, மாணவர்களின் கல்வி ஆர்வத்தையும் அறிவியல் துறையில் அவர்களின் எதிர்காலக் கனவுகளையும் ஊக்குவிக்கும் வகையில் அமைந்தது.

இந்த நிகழ்வில் பெர்லிஸ் மாநிலக் கல்வித் துறை இயக்குநர் ஹாஜி இஷாக் பின் அவாங் (Haji Ishak bin Awang), திட்டமிடல் பிரிவு உதவி இயக்குநர் ரசாய்டே பின் சே யோப் (Rasaide bin Che Yob) மற்றும் பிற கல்வித்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

மேலும், கங்கார் தமிழ்ப்பள்ளியின் பெற்றோர்-ஆசிரியர் சங்கத் தலைவர் இன்ஸ்பெக்டர் பூவேந்திரன் பிள்ளை (Inspector Povandran Pillai), பள்ளியின் தொடர்பு அதிகாரி இன்ஸ்பெக்டர் மகேஸ்வரன் (Inspector Mageswaran), இந்திய உயர் ஆணையருடன் வருகை தந்த பிரதிநிதிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

பள்ளியின் கல்விச் செயல்பாடுகள், கற்றல் வசதிகள் மற்றும் மாணவர்களின் முன்னேற்றம் குறித்து இந்திய உயர் ஆணையருக்கு எடுத்துரைக்கப்பட்டது.

இந்த வருகை, கங்கார் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்குச் சர்வதேசக் கல்வி வாய்ப்புகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், இந்தியா–மலேசியா இடையிலான கல்வி மற்றும் கலாச்சார உறவுகளை மேலும் வலுப்படுத்தும் முயற்சியாகவும் அமைந்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!