
லாஸ் ஏஞ்சல்ஸ் , ஜூன் 16 – கலிபோர்னியாவில் திங்கட்கிழமை விபத்துக்குள்ளான அமெரிக்க பி-52 ரக குண்டுவீச்சு விமானத்தில் இருந்த எட்டு பேரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுவதாக எட்வர்ட்ஸ் விமானப்படைத் தளம் தெரிவித்துள்ளது.
விமானத்தை முற்றிலுமாக அழித்ததாகத் தோன்றும் ஒரு பெரிய தீயின் விளைவுகளை விபத்து நடந்த இடத்திலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் காட்டுகின்றன.
லாஸ் ஏஞ்சல்ஸிற்கு வடக்கே சுமார் 95 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள, அமெரிக்க இராணுவத்தின் ஒரு முக்கிய செயல்பாட்டு மையமான இந்தத் தளத்தில், மதிய உணவு நேரத்திற்கு முன்னதாக இந்த விபத்து நிகழ்ந்தது.
வழக்கமான சோதனைப் பணிக்காக எட்டு பேருடன் சென்ற விமானப்படையின் பி-52 (Stratofortress) விமானம் காலை மணி 11.20 க்கு புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் எவரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்று கூறப்பட்டதோடு இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
பி-52 என்பது 1954-ல் முதன்முதலில் பறந்த ஒரு கனரக குண்டுவீச்சு விமானமாகும். இது முதலில் சோவியத் யூனியனுடனான போருக்காக வடிவமைக்கப்பட்டது.
பனிப்போர் முடிவடைந்ததிலிருந்து பல ஆண்டுகளாக இது சேவையில் இருப்பதற்காகத் தொடர்ச்சியான மேம்படுத்தப்பட்டு வந்ததாக எட்வர்ட்ஸ் விமானப்படைத் தளம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.



