
கோலாலாம்பூர், ஜூன்-16-மலேசியப் பயனீட்டாளர்களுக்கு ஒரு முக்கிய நிம்மதியளிக்கும் செய்தி…
அடுத்த மாதம் முதல் வங்கிகளுக்கு இடையிலான ATM பணப் பரிவர்த்தனைகளுக்கான கூடுதல் கட்டணம் முழுமையாக நீக்கப்படவுள்ளது.
அதாவது வரும் ஜூலை 1 முதல், மலேசியாவில் உள்ள அனைத்து வங்கிகளும் தங்களின் ATM மற்றும் SRM எனப்படும் விவேக மறுசுழற்சி எந்திரங்களில் மேற்கொள்ளப்படும் வங்கிகளுக்கு இடையிலான பணப் பரிவர்த்தனைகளுக்கான 1 ரிங்கிட் கட்டணத்தை இரத்துச் செய்யவுள்ளன.
மலேசிய வங்கிகள் சங்கமான ABM மற்றும் PayNet ஆகியவற்றின் கூட்டு முயற்சியால் கொண்டுவரப்படும் இந்த புதிய திட்டத்தின் மூலம், டெபிட் அட்டை வைத்துள்ள பொது மக்கள் அனைவரும் நாடு முழுவதும் உள்ள 14,000-க்கும் மேற்பட்ட ATM இயந்திரங்களில் எவ்வித கூடுதல் கட்டணமுமின்றி வரம்பற்ற முறையில் பணம் எடுத்துக் கொள்ளலாம்.
நாட்டில் ரொக்கமில்லா டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்து வந்தாலும், மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு ரொக்கப் பணம் இன்னும் இன்றியமையாத ஒன்றாகவே இருப்பதாக வங்கி சங்கங்கள் தெரிவித்துள்ளன.
இந்த 1 ரிங்கிட் கட்டணக் குறைப்பு, சாதாரண பொது மக்களின், குறிப்பாக கிராமப்புற மற்றும் குறைந்த வருமானம் பெறும் பிரிவினரின் அன்றாட நிதிச் சுமையைக் குறைக்கப் பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.



