Latestமலேசியா

காட்டுத் தீ: இதில் தொடர்புடைய வெளிநாட்டு நிறுவனங்களின் பெயர்களை வெளியிடுவேன் – Prabowo எச்சரிக்கை

கோலாலம்பூர், அக்-23-இந்தோனேசியாவில் காடு மற்றும் நிலப்பகுதிகளில் ஏற்பட்டுள்ள தீ விபத்துகளில் தொடர்பு கொண்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் வெளிநாட்டு நிறுவனங்களின் பெயர்களை உரிய நேரத்தில் வெளியிடப் போவதாக அந்நாட்டு அதிபர் Prabowo Subianto எச்சரித்துள்ளார். சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் நடவடிக்கைகள் இந்தோனேசியாவின் கௌரவத்திற்கு இழைக்கப்படும் அவமதிப்பாகும் என அவர் குறிப்பிட்டார்.

இந்தோனேசிய மக்கள் கண்ணியமானவர்களாகவும் பொறுமை மிக்கவர்களாகவும் இருந்தாலும், நாட்டின் உள்விவகாரங்களில் வெளிநாட்டினர் தொடர்ந்து தலையிடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்தோனேசியாவை யாரும் இழிவாகக் கருதக்கூடாது என ஜகார்த்தாவில் இரு தினங்களுக்கு முன் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் உரையாற்றிய Prabowo அதிரடியாகக் கூறினார்.

அதோடு, வெளிநாட்டுத் தலையீடுகள் மூலம் இந்தோனேசியாவின் நிலைத்தன்மையைக் குலைக்கப் பலமுறை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நாட்டில் பிளவுகளை ஏற்படுத்துவது, கிளர்ச்சிகளுக்கு நிதியளிப்பது, கலவரங்களைத் தூண்டுவது, மக்களிடையே பகைமையை உருவாக்குவது போன்ற நடவடிக்கைகள் இருந்ததையும் அவர் சுட்டிக் காட்டினார். காட்டுத் தீ விவகாரத்தில் சட்டத்தை மீறும் நிறுவனம் எதுவாக இருந்தாலும் அதன் உரிமம் ரத்து செய்யப்படும் என Prabowo எச்சரித்தார்.

இதனிடையே, காடு மற்றும் நிலப்பகுதிகளில் ஏற்படும் தீ விபத்துகள் தொடர்பான விசாரணையில் 11 நிறுவனங்களைச் சந்தேகத்திற்குரியவையாக இந்தோனேசியக் காவல்துறை அடையாளம் கண்டுள்ளது. அவற்றில் மூன்று நிறுவனங்கள் வெளிநாட்டு முதலீட்டைக் கொண்டவை எனக் கூறப்படுகிறது.

எனினும், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பெயர்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. அதேவேளையில், விசாரணைகள் சுமூகமாக தொடர்ந்து நடைபெற்று வருவதாக இந்தோனேசிய தேசிய காவல் படைத் தலைவர் கூறியுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!