
கிராபி, ஜூன்-8-தாய்லாந்தின் கிராபி (Krabi) கடற்பகுதியில், உலகிலேயே மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்த ‘போர்ச்சுகீசிய போர்க்கப்பல்’ (Portuguese man-of-war) எனப்படும் ஜெல்லி மீன்கள் கண்டறியப்பட்டதை அடுத்து, அங்கு சுற்றுப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கிராபியில் உள்ள Mu Ko Lanta மற்றும் Hat Noppharat Thara-Mu Ko Phi Phi ஆகிய இரு தேசியப் பூங்காப் பகுதிகளில் இந்த நச்சு ஜெல்லிமீன்கள் கண்டறியப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட கடற்கரைகளில் ‘சிவப்பு எச்சரிக்கை கொடிகள்’ ஏற்றப்பட்டு, குளிப்பதற்கும் நீந்துவதற்கும் முழுமையாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நீலம் அல்லது ஊதா நிறத்தில், போர்க்கப்பலின் பாய்மரம் போன்ற தோற்றத்தைக் கொண்ட இந்த உயிரினத்தின் நச்சுத்தன்மை, மனிதர்களின் நரம்பு மண்டலம் மற்றும் இதயத் தசைகளைப் பாதிக்கக்கூடியது.
கடற்கரையில் இவை இறந்து காய்ந்து கிடந்தாலும், அவற்றின் நச்சுத்தன்மை குறையாது என்பதால், சுற்றுப் பயணிகள் தீவிர எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.



