
கிள்ளான், ஆகஸ்ட்-1-சிலாங்கூர், கிள்ளானில் தெருநாய்களைப் பிடிக்கும் நடவடிக்கையின் போது ஏற்பட்ட வாக்குவாதம் மற்றும் அமளி தொடர்பான 3 நிமிட வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாய்களைப் பிடிக்கும் முறை மிகவும் கொடூரமாகவும் மனிதநேயமற்ற முறையிலும் இருந்ததாகக் கூறி, இந்தச் சம்பவம் இணையவாசிகளிடையேயும் விலங்கு நல அமைப்புகளிடையேயும் கடும் கொந்தளிப்பையும் எதிர்ப்பையும் உருவாக்கியுள்ளது.
இந்தச் சம்பவத்தில் Rocky என்ற நாய் உயிரிழந்துள்ளது.
Taman Teluk Gedung Indah-வில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரவியதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட அமுலாக்கப் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என விலங்கு நல ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
நாய் பிடிக்கும் போது பின்பற்றப்பட்ட வழிமுறைகளைக் கேள்வி எழுப்பியுள்ள ஆர்வலர்கள், அந்த வாயில்லா ஜீவன் சித்திரவதை செய்யப்பட்டதாகக் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் வகையில் கிள்ளான் அரச மாநகர மன்றமான MBDK, விளக்கம் ஒன்றை அளித்துள்ளது.
நாய்களைப் பிடிக்கும் நடவடிக்கை முழுமையாக SOP நடைமுறைக்கும், வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சான KPKT நிர்ணயித்த விதிகளுக்கும் உட்பட்டே மேற்கொள்ளப்பட்டதாக MBDK உறுதிப்படுத்தியுள்ளது.
சம்பவத்தன்று, அரசு ஊழியர்களின் கடமைக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நபர் ஒருவர் கத்தியைக் காட்டி மிரட்டியதுடன், நாயைப் பிடிக்கப் பயன்படுத்திய கயிற்றையும் அறுக்க முயன்றதாக MBDK தெரிவித்துள்ளது.
அந்த முரண்பாட்டின் போது ஏற்பட்ட இழுபறியின் காரணமாகவே அந்த நாய் உயிரிழந்ததாம்.
மேலும், அண்மையில் தெருநாய்கள் துரத்தியதால் வாலிபர் ஒருவர் கோமா நிலைக்குச் சென்ற சம்பவத்தைத் தொடர்ந்து, பொது மக்களின் பாதுகாப்புப் புகார்களின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறிய MBDK, இச்சம்பவம் குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்தது.
விலங்கு நலன் மற்றும் சட்ட விதிகளுக்கு உட்பட்டே தங்களின் அமுலாக்க நடவடிக்கைகள் எப்போதும் தொடரும் என MBDK மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
ஆனால், இணையவாசிகள் தொடர்ந்து அதிருப்தியில் உள்ளனர்.
#justiceforrocky என்ற hashtag-கை trend செய்து தங்களின் சினத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.



