
கோலாலம்பூர், பிப்ரவரி-8 – கிள்ளான் பள்ளத்தாக்கில் கருப்புப் பணத்தை மாற்றும் கும்பலொன்றை முறியடிடுத்து, 3.6 மில்லியன் ரிங்கிட்டை குடிநுழைவுத் துறை பறிமுதல் செய்துள்ளது.
சிலாங்கூரில் கிள்ளான், கோலாலம்பூரில் பிரிக்ஃபீல்ட்ஸ் ஆகிய இடங்களில் அச்சோதனை நடத்தப்பட்டது.
நகைகளுடன் சேர்த்து 1,400 யூரோ மற்றும் 10,000 யுவான் மதிப்புள்ள வெளிநாட்டு நாணயங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
பேங்க் நெகாரா மற்றும் சைபர் செக்யுரிட்டி மலேசியா ஒத்துழைப்புடன் வியாழக்கிழமை பிற்பகலில் அச்சோதனை மேற்கொள்ளப்பட்டது.
ஒரு நாளைக்கு 15,000 ரிங்கிட் முதல் 60,000 ரிங்கிட் வரையிலும், விழாக்காலங்களில் 110,000 ரிங்கிட் வரையிலும் அக்கும்பலிடம் வருகிறது.
அப்பணம், முறைப்படி வங்கிகள் வாயிலாகவோ அல்லது அதிகாரப்பூர்வ நிதி நிறுவனங்கள் வாயிலாகவோ அல்லாமல் இந்தியா, இந்தோனீசியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக அனுப்பப்படுகிறது.
இந்நிலையில் 2 வாரங்கள் வேவுப் பார்த்து கிள்ளானில் 5 பேரை குடிநுழைவுத் துறை கைதுச் செய்தது.
பணச் சலவை கும்பலின் மூளையாகச் செயல்பட்டவன் உட்பட 3 இந்தியப் பிரஜைகள், 2 இந்தோனீசியர்களே அவர்களாவர்.
பின்னர் பிரிக்ஃபீல்ட்ஸில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 5 இந்திய நாட்டவர்கள் கைதாகினர்.
கைதானவர்களில் சிலர் சுற்றுலா விசாவைத் தவறாகக் பயன்படுத்தியுள்ளனர்; சிலர் அனுமதிக்கப்பட்டதை விட அதிக காலம் தங்கியுள்ளனர்; இன்னும் சிலரிடம் முறையான பயணப் பத்திரமே இல்லை.
அவர்கள் அனைவரும் விசாரணைக்காக செமஞ்சே தடுப்பு முகாம் கொண்டுச் செல்லப்பட்டனர்.