
குவா மூசாங், ஆகஸ்ட்-22-கிளந்தான், குவா மூசாங், கம்போங் கெரிந்திங்கில், கட்டுப்பாட்டை இழந்த பிக்கப் இரக வாகனம் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதி, பின்னர் அருகிலிருந்த வீட்டின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
நேற்று மாலை சுமார் 4.55 மணியளவில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில், கேமரன் மலையிலிருந்து கோத்தா பாரு நோக்கி 34 வயது நபர் ஓட்டிச் சென்ற Ford Ranger பிக்கப் வாகனம், திடீரென கட்டுப்பாட்டை இழந்ததாகக் கூறப்படுகிறது.
அப்போது சாலையின் இடதுபுற ஓரத்தில் நின்றுகொண்டிருந்த 53 வயது நபரின் மோட்டார் சைக்கிள் மீது மோதிய அந்த வாகனம், தொடர்ந்து சாலையோரத்தில் இருந்த வீட்டின் மீதும் பலமாக மோதி நின்றது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநரின் இடது காலில் இலேசான காயம் ஏற்பட்டு, அவர் குவா மூசாங் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
பிக்கப் வாகன ஓட்டுநருக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை.
மோதப்பட்ட வீட்டிலும் யாரும் பாதிக்கப்படவில்லை.



