Latestமலேசியா

கூட்டணியில் ஆர்வம் இல்லையெனில் வெளிப்படையாகக் கூறுங்கள் – மலாக்கா BNனிடம் கூறும் அமிருடின்

கோலாலம்பூர், செப்- 21 -மலாக்கா மாநிலத் தேர்தலை எதிர்கொள்ள பக்காத்தான் ஹராப்பானுடன் (PH) கூட்டணி அமைப்பதில் பாரிசான் நேஷனலுக்கு (BN) ஆர்வம் இல்லை என்றால், அதனைத் தெளிவாகத் தெரிவிக்குமாறு PH தேர்தல் இயக்குநர் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி கேட்டுக் கொண்டுள்ளார். சட்டமன்றம் கலைக்கப்படும் வரை பேச்சுவார்த்தைகளை ஒத்திவைக்க BN விரும்புவதாகத் தெரிகிறது. எனினும் PH தனது தேர்தல் தயாரிப்புகளை முன்னெடுக்க ஏதுவாக முன்கூட்டிய தெளிவான நிலைப்பாடு அவசியம் என அவர் கூறினார்.

BN-க்கு கூட்டணி அமைப்பதில் விருப்பம் இல்லையென்றால் PH-க்கு அதில் எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் அந்த முடிவை முன்கூட்டியே தெரிவிப்பது நல்லது என சிலாங்கூர் மந்திரி பெசாருமான அமிருடின் கூறினார்.

தற்போதைய நிலையில், BN கூட்டணியில் ஆர்வம் காட்டுவதற்கான தெளிவான அறிகுறிகள் எதுவும் இல்லை. மேலும், அம்னோ தலைமையிலான BN-ன் நிலைப்பாடு பலமுறை மாறியுள்ளதை அமிருடின் சுட்டிக் காட்டினார்.

தனித்துப் போட்டியிட விரும்புவதாக முன்னதாக கூறிய BN, பின்னர் பெரிக்காத்தான் நேஷனலுடன் இணைந்து செயல்படுவது குறித்தும், அதன் பின் PH உடனான பேச்சுவார்த்தைக்கான வாய்ப்புகள் குறித்தும் கருத்துகளை வெளியிட்டிருந்தது.

இதனிடையே, மலாக்கா மாநிலத் தேர்தலுக்கான எந்தவொரு தேர்தல் ஒத்துழைப்பு குறித்தும் முடிவு செய்யும் அதிகாரம் BNனின் மலாக்கா தலைவரும் மாநில முதலமைச்சருமான Ab Rauf Yusohவிடமே வழங்கப்பட்டுள்ளது. கூட்டணி அமைக்கப்படும் பட்சத்தில் அக்கூட்டணி நேர்மையாகவும் நம்பகத்தன்மையுடனும் இருக்க வேண்டும் எனக் கூறிய BN தேசியத் தலைவர் Datuk Seri Ahmad Zahid Hamidi, மலாக்கா சட்டமன்றம் கலைக்கப்பட்ட பின்னரே முறையான பேச்சுவார்த்தைகள் தொடங்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மலாக்கா மாநில சட்டமன்றத்தின் தற்போதைய பதவிக்காலம் டிசம்பர் 31ஆம் தேதி நிறைவடைய உள்ளது. சட்டமன்றம் இம்மாதமே கலைக்கப்படலாம் என Ab Rauf முன்னதாகக் கூறியிருந்த நிலையில், PH மற்றும் BN இடையிலான தேர்தல் ஒத்துழைப்பு கவனத்தைப் பெற்றுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!