
மலேசியக் கூட்டரசு அரசுப் பணியில் இந்தியர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க, 2027 முதல் 2029 வரை மூன்றாண்டுச் சிறப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்துமாறு இந்திய அரசு சாரா அமைப்புகளின் கூட்டமைப்பான ACE-இன் தலைவர் பசுபதி சிதம்பரம் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்களின்படி, மொத்தம் 13 லட்சத்து 2 ஆயிரத்து 713 அரசுப் பணியாளர்களில் இந்தியர்கள் 3.63 விழுக்காடு அதாவது 47,349 பேர் மட்டுமே உள்ளனர்.
இவர்களில் 41,891 பேர் கூட்டரசு அரசுப் பணியில் உள்ளனர். பெரும்பாலானோர் கல்வி, சுகாதாரம் மற்றும் உயர்கல்வி அமைச்சுகளில் பணியாற்றுகின்றனர்.
இதற்கிடையில், 2021 முதல் 2025 வரை இந்தியர்களிடமிருந்து பெறப்பட்ட 1 லட்சத்து 94 ஆயிரத்து 807 அரசுப் பணி விண்ணப்பங்களில், 15,875 பேர் மட்டுமே நேர்காணலுக்குத் தேர்வு செய்யப்பட்டு, 5,289 பேர் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். இது மொத்த விண்ணப்பங்களில் வெறும் 2.71 விழுக்காடாகும்.
குறிப்பாக, B40 பிரிவைச் சேர்ந்த தகுதியான இந்தியர்களுக்கு வேலைவாய்ப்புகளை அதிகரிக்கப் பயிற்சி, வழிகாட்டுதல் மற்றும் சிறப்பு ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என ACE கேட்டுக்கொண்டுள்ளது.
அரசுப் பணியில் சமத்துவமான வாய்ப்புகளை உறுதிசெய்து, இந்திய சமூகத்தின் பின்தங்கிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த வேண்டும் என்றும் அது வலியுறுத்தியுள்ளது.



