
அலோர் ஸ்டார், அக்டோபர்-6,கெடாவில் உள்ள 11 பெட்ரோல் நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட சோதனையில், RON95 பெட்ரோலில் தண்ணீர் கலந்ததற்கான எந்த அறிகுறியும் கண்டறியப்படவில்லை.
RON95 பெட்ரோலில் தண்ணீர் கலந்திருப்பதாக சமூக ஊடகங்களில் பரவிய தகவல்களைத் தொடர்ந்து, உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சான KPDN இந்தச் சோதனையை மேற்கொண்டது.
சில பெட்ரோல் நிலையங்களில் எரிபொருள் நிரப்பிய பின்னர் தங்களது வாகனங்கள் பழுதடைந்ததாக பொது மக்களிடமிருந்து புகார்கள் கிடைத்ததாக கெடா KPDN இயக்குநர் நிசாம் ஜமாலுடின் Nizam Jamaludin தெரிவித்தார்.
இதையடுத்து அலோர் ஸ்டார், குபாங் பாசு, சுங்கை பட்டாணி மற்றும் கூலிம் பகுதிகளிலுள்ள Petron மற்றும் Caltex பெட்ரோல் நிலையங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன.
Manual dipping முறை மற்றும் Automatic Tank Gauge பதிவுகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட சோதனையில், எரிபொருள் சேமிப்புத் டாங்கிகளில் தண்ணீர் இருப்பதற்கான அறிகுறி எதுவும் கண்டறியப்படவில்லை.
இருப்பினும், இந்த முதற்கட்ட முடிவு இறுதியானது அல்ல என்றார் அவர்.
சேகரிக்கப்பட்ட எரிபொருள் மாதிரிகள் மேல் ஆய்வுக்காக இராசயணய இலாகாவுக்கு அனுப்பப்படவுள்ளன.
ஆய்வு முடிவுகள் மற்றும் முழுமையான விசாரணைக்குப் பின்னரே அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என நிசாம் கூறினார்.
முன்னதாக பினாங்கு, பத்து காவானிலும் இதே புகார்கள் எழுந்த நிலையில், சோதனைகளுக்குப் பிறகு அங்கும் RON95 பெட்ரோலில் தண்ணீர் கலக்கப்படவில்லை என்பது உறுதியானது.



