
கோலாலம்பூர், அக்-19-கிழக்கு கடற்கரை ரயில் இணைப்புத் திட்டமான ECRL ரயில் சேவை டிசம்பர் மாத மத்தியப் பகுதியில் தொடங்கவுள்ள நிலையில், கோம்பாக்கிலிருந்து கோத்தா பாரு வரையிலான transit சேவைக்கான சிக்கன வகுப்புக் கட்டணம் 125 ரிங்கிட்டில் இருந்து தொடங்குகிறது.
அக்கட்டண நிர்ணயிப்புக்கு அரசாங்கம் அக்டோபர் 16ஆம் தேதி ஒப்புதல் அளித்ததாக மலேசியா ரயில் லிங்க் நிறுவனம் (MRL) அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது. பயணிகளின் தேவை மற்றும் பயண நேரம் உள்ளிட்ட விஷயங்களின் அடிப்படையில் கட்டணங்கள் மாறுபடும் வகையில், நெகிழ்வான கட்டண முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
523 கிலோமீட்டர் நீளமுள்ள கோம்பாக்–கோத்தா பாரு வழித்தடத்தில், எக்ஸ்பிரஸ் ரயில் சேவைக்கான கட்டணம் 147 ரிங்கிட் முதல் தொடங்குகிறது. அதன் வழி, பயணிகள் தங்களது தேவைக்கேற்ப transit அல்லது எக்ஸ்பிரஸ் சேவைகளைத் தேர்வு செய்யலாம்.
இதனிடையே, கோம்பாக்கிலிருந்து கோலா திராங்கானுவுக்கான transit சேவைக் கட்டணம் 95 ரிங்கிட் முதல் தொடங்குகிறது. கோம்பாக்–KotaSAS வழித்தடத்திற்கான கட்டணம் 60 ரிங்கிட் முதல் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், கோம்பாக்–கோலா திராங்கானு எக்ஸ்பிரஸ் சேவைக்கான கட்டணம் 110 ரிங்கிட்டில் இருந்து தொடங்கும் நிலையில், கோம்பாக்-KotaSAS வழித்தடத்திற்கான கட்டணம் 68 ரிங்கிட்டில் இருந்து ஆரம்பிக்கிறது. ECRL சேவை தொடங்கியதும், தலைநகரையும் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளையும் இணைக்கும் பயண வசதி மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.



