
சைபர்ஜெயா, அக்டோபர் 19 – சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதில் கருத்துச் சுதந்திரத்துடன் பொறுப்பும் அவசியமென மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ள நிலையில், இணையவழித் துன்புறுத்தலை இயல்பான ஒன்றாக ஏற்றுக்கொள்ள முடியாதென மலேசியத் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான MCMC தெரிவித்துள்ளது.
கருத்துச் சுதந்திரம் மற்றும் விமர்சனங்கள் நாகரிகமாகவும் பொறுப்புடனும் வெளிப்படுத்தப்பட வேண்டுமென ஆணையம் கூறியது. கருத்து வேறுபாடுகளைக் காரணமாகக் கொண்டு மிரட்டல், அவமதிப்பு, தனிநபர் தாக்குதல் மற்றும் ஒருவரின் தனிப்பட்ட தகவல்களைப் பகிர்ந்து அவரது பாதுகாப்புக்கும் மரியாதைக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்துவது தவிர்க்கப்பட வேண்டுமென்றும் வலியுறுத்தியது.
மேலும், செயற்கை நுண்ணறிவை (AI) தவறாகப் பயன்படுத்தி போலியான உள்ளடக்கங்களை உருவாக்குவதும், உண்மைக்குப் புறம்பான தகவல்களைப் பரப்புவதும் அவதூறு மற்றும் வெறுப்பைத் தூண்டக்கூடும் என ஆணையம் கவலை தெரிவித்தது.
இணையவழிப் பாதுகாப்பை வலுப்படுத்த சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் இணைந்து தொடர்ந்து செயல்படவுள்ளதாகக் குறிப்பிட்ட MCMC, சட்டத்தை மீறும் சந்தேகத்திற்குரிய உள்ளடக்கங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தது. மேலும், தகவல்களைப் பகிர்வதற்கு முன் அவற்றின் உண்மைத்தன்மையைச் சரிபார்த்து, இணையத்தில் மற்றவர்களின் மரியாதையைப் பேணுமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டது.



