
கோயம்புத்தூர், செப்-29-இந்தியா, கோயம்புத்தூரில் காவல் வீரர் ஒருவர் SUV வாகனத்தின் கூரையைப் பற்றிக் கொண்டு சுமார் 30 கிலோமீட்டர் பயணித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சினிமாவை மிஞ்சிய அந்த சாகசம் விலாங்குறிச்சி–காளப்பட்டி சாலையில் நிகழந்தது.
அங்கு வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர், கர்நாடகப் பதிவு எண் கொண்ட SUV வாகனத்தை நிறுத்த முயன்றனர். வாகனத்திற்குள் இருந்த பொட்டலங்களைச் சோதிக்க முயன்ற போது, காவல் வீரரைத் தள்ளிவிட்டு கதவை மூடியபடி ஓட்டுநர் வாகனத்தை வேகமாகச் செலுத்தியதாகக் கூறப்படுகிறது.
அப்போது பணியில் இருந்த காவல் வீரர் எம். வேல்முருகனின் கை வாகனத்தின் கதவில் சிக்கிக் கொண்டது. எனவே அவர் மேற்கூரையில் இருந்த கைப்பிடியைப் பற்றிக் கொண்டு வாகனத்தின் கூரையில் ஏறிக் கொண்டார்.
வாகனத்தில் இருந்தவர்கள் நிறுத்தாமல் பல பகுதிகளைக் கடந்து வேகமாகச் சென்றனர். மற்ற காவல் வீரர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர், உள்ளூர் தன்னார்வலர்களின் உதவியுடன் வாகனத்தைப் பின்தொடர்ந்தனர்.
இறுதியில் திருப்பூர் மாவட்ட எல்லையில் உள்ள தேக்கலூர் அருகே வாகனம் மடக்கிப் பிடிக்கப்பட்டது. அதில் இருந்த மூவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து சுமார் 170 கிலோகிராம் குட்கா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
இதனிடையே வாகனத்தின் மேற்கூரையைப் பற்றிக் கொண்டு பல கிலோமீட்டர் சென்ற காவல் வீரர் வேல்முருகனைப் பார்த்த பல வாகனமோட்டிகள், அச்சம்பவத்தைச் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிர்ந்தனர். அவரது அத்துணிச்சலான செயலைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.



