கோலா பெராங், ஏப்ரல் 17 – திரங்கானு, கோலா பெராங், கம்போங் பாசிர் சிம்புலிலுள்ள, பள்ளிவாசலின் கழிவறை தொட்டிலிருந்து, ஆண் குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
நேற்று மாலை ஏழு வாக்கில், பள்ளிவாசலிலுள்ள பெண்கள் கழிவறையை சுத்தம் செய்துக் கொண்டிருந்த துப்புரவு பணியாளர் ஒருவர், அந்த ஆண் குழந்தையின் சடலத்தை கண்டு தகவல் கொடுத்ததாக, கம்போங் பாசிர் சிம்புல் கிராம மேம்பாடு மற்றும் பாதுகாப்பு செயற்குழு தலைவர் முஹமட் முஸ்தபா தெரிவித்தார்.
கழிவறையை சுத்தம் செய்த பிறகு, கழிவறை தொட்டியில் நீரை “பிளஷ்” செய்த போது, அதிலிருந்து இரத்தம் போன்ற திரவம் மிகவும் துர்நாற்றத்துடன் வெளியேறியது.
அதனால், கழிவறை தொட்டியில் அடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என எண்ணிய அந்த துப்புரவு பணியாளர், குச்சியால் அதனை தோண்டி எடுக்க முற்பட்ட போது, குழந்தையின் சிதைந்த கையை கண்டு அதிர்ச்சிக்குள்ளானதாக கூறப்படுகிறது.
அதனை தொடர்ந்து உடனடியாக போலீசுக்கு தகவல் வழங்கப்பட்டதாக, முஸ்தபா சொன்னார்.
இவ்வேளையில், அச்சம்பவத்தை உறுதிப்படுத்திய உலு திரங்கானு போலீஸ் தலைவர் சுப்ரிடெண்டன் ஜைனுல் முஜஹிடின் மாட் யுடின், அக்குழந்தை இறந்து 24 மணி நேரத்திற்கு மேலாகி இருக்கலாம் என்றார்.
அச்சம்பவம் தொடர்பில், விசாரணை தொடரும் வேளை : சந்தேக நபரை அடையாளம் காணும் நடவடிக்கைகளையும் போலீஸ் முடுக்கி விட்டுள்ளது.