
சிரம்பான், அக்டோபர்-19,நெகிரி செம்பிலான், சிரம்பானில் உள்ள ஓர் இடைநிலைப் பள்ளியில், 300-க்கும் மேற்பட்ட மாணவிகளின் முகங்களைப் பயன்படுத்தி, AI தொழில்நுட்பத்தின் மூலம் போலி நிர்வாணப் படங்கள் உருவாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் படங்கள் மாணவர்களிடையே பகிரப்பட்டதோடு, டெலிகிராம் செயலி வாயிலாக விற்பனை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
கடந்த ஆகஸ்ட் 12-ஆம் தேதி, பள்ளியின் சூராவில் கடவுச்சொல் இல்லாத கைப்பேசியைக் கண்டெடுத்த இரண்டாம் படிவ மாணவர் ஒருவர், அதில் ஆபாசப் படங்கள் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளார்.
அந்தக் கைப்பேசி, அதே பள்ளியில் பயிலும் ஐந்தாம் படிவ மாணவர் ஒருவருக்குச் சொந்தமானது என்பது பின்னர் உறுதிப்படுத்தப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக 5 போலீஸ் புகார்கள் செய்யப்பட்டுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட மாணவர் பள்ளியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதனிடையே, பாதிக்கப்பட்ட அனைத்து மாணவிகளின் பெற்றோருக்கும் முறையான தகவல் தெரிவிக்கப்படவில்லை என வழக்கறிஞர் Ng Kian Nam குற்றஞ்சாட்டியுள்ளார்.
இவ்விவகாரம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.



