
சிரம்பான், ஜூலை-30-சிறுபான்மைச் சமூகங்களின் உரிமைகளைப் பாதுகாப்பது, பெரும்பான்மையினரான மலாய் மற்றும் இஸ்லாமியர்களின் உரிமைகளைக் பலவீனப்படுத்தாது எனப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெளிவுப்படுத்தியுள்ளார்.
சிரம்பான், பரோயில் நடைபெற்ற Temu Anwar நிகழ்வில் பேசிய பிரதமர், ஒரு சமூகத்திற்கு உதவுவது மற்றொரு சமூகத்தின் உரிமைகளைப் பறிப்பதாகக் கருதும் குறுகிய அரசியலை மக்கள் புறக்கணிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
இஸ்லாம், மலாய் மொழி மற்றும் மலாய்க்காரர்களின் சிறப்புரிமைகள் குறித்த அரசியலமைப்புச் சட்டப் பாதுகாப்புகள் மடானி அரசாங்கத்தின் கீழ் உறுதியாக நிலைநிறுத்தப்படுவதாக அவர் சொன்னார்.
நாடு முன்னேற வேண்டுமென்றால், இனம் பார்க்காமல் அனைத்து நலிவடைந்த மக்களையும் அரவணைத்துச் செல்வதே உண்மையான ஆட்சிக்கான அடையாளம் என்றும் பிரதமர் சுட்டிக் காட்டினார்.
அதே சமயம், சுதந்திரமடைந்து 70 ஆண்டுகளை நாம் நெருக்கும் இச்சமயத்தில், இந்நாட்டு மக்களை இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள் எனக் கூறுவதெல்லாம் அவமானகரமானச் செயல் என்றும் பிரதமர் சாடினார்.



