
பெட்டாலிங் ஜெயா, ஜூன் 12 – அண்மையில் தாப்பா அருகே Gunung Batu Putih மலையேறிய பெண் ஒருவர் இரண்டு வாரங்களாகக் காணாமல் போனதைத் தொடர்ந்து ஏற்பட்ட பாதுகாப்பு குறித்த கவலைகளையடுத்து, அனைத்து நிரந்தர வனக் காப்பகங்களிலும் சில மலையேற்ற நடவடிக்கைகளுக்கான விண்ணப்பங்களை ஜூலை 1 ஆம் தேதி முதல் சிலாங்கூர் தற்காலிகமாக நிறுத்திவைக்கும்.
மறு அறிவிப்பு வரும் வரை “டிரான்ஸ் ஹைக்கிங்”( trans hiking)”மற்றும் கம்ப்ரஸ் ஹைக்கிங் (compress hiking) நடவடிக்கைகளுக்கான புதிய விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படாது என்று சிலாங்கூர் வனத்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
“டிரான்ஸ் ஹைக்கிங்” என்பது ஒரு வனக் காப்பகம் அல்லது மலைத்தொடரை, ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்லும் மலையேற்றத்தைக் குறிக்கிறது.
அதேசமயம் “ஹைக்கிங் கம்ப்ரஸ்” என்பது வேகமான அல்லது நேர வரம்புக்குட்பட்ட மலையேற்றச் செயல்பாட்டைக் குறிக்கிறது.
மேலும், இந்த உத்தரவுகளை பின்பற்றும்படி பொதுமக்களுக்கு நினைவூட்டியுள்ள மாநில வனத்துறை, இதனை மீறுவோர் மாநில வனச் சட்டங்களின் கீழ், ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, 30,000 ரிங்கிட்வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
அதிக ஆபத்துள்ள மலையேற்றப் பாதைகளில் மலையேறும் நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கும் பேராக் வனத்துறையின் இதேபோன்ற முடிவைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



