ஷா ஆலாம், ஏப்ரல் 20 – சிலாங்கூரில் இதுவரை 3,850 வேலை செய்யும் தாய்மார்கள், ‘Mama Kerja’ திட்டத்தின் கீழ் 1,000 ரிங்கிட்டை குழந்தைப் பராமரிப்பு ஊக்கத் தொகையாகப் பெற்றுள்ளனர்.
அத்திட்டம், குழந்தைப் பராமரிப்புச் செலவுகளைச் சமாளிக்க உதவும் வகையில் கடந்தாண்டு மாநில சட்டமன்றத் தேர்தலுக்காக ஒற்றுமை அரசாங்கம் அறிவித்த தேர்தல் வாக்குறுதி என மந்திரி பெசார் Datuk Seri Amirudin Shari கூறினார்.
மார்ச் மாதம் வரையில் கிடைக்கப்பெற்ற 5,595 விண்ணப்பங்களில் அவை ஒரு பகுதியாகும் என்றார் அவர்.
இணைக்கப்பட்ட துணை ஆவணங்களின் விவரங்கள் சரிபார்க்கப்பட்ட பிறகு, எஞ்சிய விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும் என்றும் Amirudin சொன்னார்.
விண்ணப்பத்தாரர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், அதிகப்படியான குழந்தைப் பராமரிப்புச் செலவே வேலை செய்யும் தாய்மார்களின் மிகப் பெரிய சவாலாக இருப்பது தெரிய வந்துள்ளது.
எனவே, சரியான நேரத்தில் தான் மாநில அரசு அந்த ‘Mama Kerja’ திட்டத்தை அறிமுகம் செய்துள்ளதாகக் கூறிய Amirudin, மாநிலத்தை மேம்படுத்தும் அதே வேளை இது போன்ற மக்கள் நலத்திட்ட உதவிகளும் தொடரப்படும் என உத்தரவாதம் அளித்தார்.
50 லட்சம் ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டில் கடந்தாண்டு நவம்பர் 1-ம் தேதி தொடங்கிய ‘MamaKerja’ திட்டம், 12 வயது மற்றும் அதற்குக் கீழ் 3 பிள்ளைகள் கொண்ட வேலை செய்யும் தாய்மார்களுக்கு பயனளிக்கும் நோக்கத்தைக் கொண்டதாகும்.
எனினும் அவர்களின் மாத குடும்ப வருமானம் 8,000 ரிங்கிட் மற்றும் அதற்குக் கீழ் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.